பெண்கள் பிரீமியர் லீக் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் மும்பை- பெங்களூரு அணிகள் மோதல்
- தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- முன்னாள் சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
- கடந்த ஆண்டில் பட்டம் வென்ற அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.3 கோடியும் வழங்கப்பட்டது.
நவிமும்பை:
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் 2023-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அறிமுக ஆண்டில் மும்பை இந்தியன்சும், அடுத்த ஆண்டில் (2024) பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், கடந்த ஆண்டு 2-வது முறையாக மும்பை இந்தியன்சும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
இந்த நிலையில் 4-வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
பிப்ரவரி 5-ந் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில், முதல் 11 லீக் ஆட்டங்கள் நவிமும்பையிலும், இதைத்தொடர்ந்து அடுத்த 9 லீக் ஆட்டங்கள், வெளியேற்றுதல் சுற்று, இறுதிப்போட்டி ஆகியவை குஜராத் மாநிலம் வதோதராவிலும் அரங்கேறுகிறது. சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய பெண்கள் அணி வென்ற பிறகு நடக்கும் பெரிய போட்டி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சந்திக்கும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
கடந்த 3 சீசன்களிலும் டெல்லி அணிக்கு தலைமை தாங்கி அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற மெக் லானிங் (ஆஸ்திரேலியா) உ.பி.வாரியர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டதுடன் அந்த அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்றுள்ளார். 50 ஓவர் உலகக் கோப்பையில் கலக்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். மற்றபடி எல்லா அணிகளும் ஒரு சில வீராங்கனைகள் மாற்றத்துடன் தங்களது படை பலத்தை அதிகரித்து களம் காணுகின்றன.
ஒவ்வொரு அணியிலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நட்சத்திர பட்டாளங்கள் அதிகம் இடம் பிடித்துள்ளனர். இதனால் எந்த அணி வாகை சூடும் என்று கணிப்பது கடினமான காரியமாகும். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இடையே கோப்பையை வெல்வதில் கடும் போட்டி நிலவும் என கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
போட்டிக்கான பரிசுத் தொகை விவரம் அறிவிக்கப்படவில்லை என்றாலும், கடந்த ஆண்டில் பட்டம் வென்ற அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.3 கோடியும் வழங்கப்பட்டது. அதே பரிசுத் தொகையே இந்த முறையும் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
நவிமும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- முன்னாள் சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணியில் நாட் சிவெர், ஹெய்லி மேத்யூஸ், அமெலியா கெர், இல்லிங்வொர்த், அமன்ஜோத் கவுர், ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக், தமிழக விக்கெட் கீப்பர் கமலினி உள்ளிட்ட சிறந்த வீராங்கனைகள் அங்கம் வகிக்கின்றனர்.
இதேப ோல் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணியில் ஜார்ஜியா வோல், கிரேஸ் ஹாரிஸ் நடினே டி கிளார்க், அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்ட்ராகர், லாரென் பெல், ராதா யாதவ், ஸ்ரேயங்கா பட்டீல், ரிச்சா கோஷ் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். தனிப்பட்ட காரணத்தால் ஆல்-ரவுண்டரான எலிசி பெர்ரி (ஆஸ்திரேலியா) விலகி இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகும்.
உலகக் கோப்பையில் ஒன்றாக கலக்கிய ஹர்மன்பிரீத், மந்தனா இருவரும் எதிரும், புதிருமாக கோதாவில் குதிப்பதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்
இருவரும் நேற்று நிருபர்களிடம் பேசும் போது, 'நாங்கள் (இந்தியா) உலகின் தலைச்சிறந்த அணியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இன்னும் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. அதற்கு டபிள்யூ.பி.எல். போட்டி உதவிகரமாக இருக்கும்' என்றனர்.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 4 ஆட்டத்திலும், பெங்களூரு 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ ஹாட் ஸ்டார் செயலியிலும் பார்க்கலாம்.