கிரிக்கெட் (Cricket)

சூர்யகுமார் யாதவை எச்சரித்த ஐசிசி: அபராதம் விதிக்க வாய்ப்பு எனத் தகவல்

Published On 2025-09-25 19:59 IST   |   Update On 2025-09-25 19:59:00 IST
  • வெற்றி பெற்ற பிறகு பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சூர்யகுமார் யாதவ் பேசியதாக குற்றச்சாட்டு.
  • பாகிஸ்தானின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த போட்டி நடுவருக்கு ஐசிசி உத்தரவு.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதல், அதனைத் தொடர்ந்து இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தானின் அத்துமீறல், இந்தியாவின் பதிலடி என இந்தியா- பாகிஸ்தான் இடையில் சண்டைபெற்று, இன்னும் இருநாட்டு உறவுகள் மேம்படாத நிலையில் இந்த போட்டி தேவையா? என்ற கேள்வி எழும்பியது.

ஆனால், இருநாடுகளுக்கு இடையிலான போட்டியை மத்திய அரசு ஆதரிக்காது. ஆனால் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை போன்ற தொடரில் இந்தியா பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை என மத்திய அரசு தெரிவித்தது.

இருந்தபோதிலும் போட்டியின்போது இருநாட்டு வீரர்களும் கைக்குலுக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் டாஸ் போடும்போதும் கைக்குலுக்கவில்லை. இதனால் சர்ச்சை எழுந்தது.

இதற்கிடையே குரூப் பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசும்போது "சரியான சந்தர்ப்பம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். நாங்கள் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். மிகுந்த துணிச்சலை வெளிப்படுத்திய எங்கள் அனைத்து ஆயுதப் படைகளுக்கும் இந்த வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறோம். எங்கள் அரசு, BCCI இன்று இணைந்துள்ளோம். நாங்கள் இங்கு ஜஸ்ட், போட்டியில் விளையாட வந்தோம்" எனத் தெரிவித்திருந்தார்.

கிரிக்கெட் போட்டியின்போது அரசியல் தொடர்பான கருத்துகளை வீரர்கள், கேப்டன்கள் வெளிப்படுத்தக்கூடாது. அப்படி வெளிப்படுத்தினால் அது வீரர்களின் நன்னடத்தை விதியை மீறுவதாகும். சூர்யகுமார் நன்னடத்தை விதியை மீறியதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஐசிசி-யிடம் புகார் அளித்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் போட்டி நடுவர் ரிச்சி ரிச்சார்ட்சனை விசாரணை நடத்த ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதை ரிச்சி ரிச்சார்ட்சன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ரிச்சி ரிச்சார்ட்சன் முன் சூர்யகுமார் யாதவ் விசாரணைக்கு ஆஜராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் பிசிசிஐ சிஓஓ ஹெமங் அமின் மற்றும் கிரிக்கெட் செயல்பாடுகளுக்கு மானேஜர் சம்மேர் மலாபுர்கர் ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிகிறது.

சூர்யகுமார் யாதவுக்கு அபராதம் அல்லது போட்டி தடைக்கான புள்ளிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News