சூப்பர், சூப்பர், சூப்பர்... ரிஷப் பண்டை பாராட்டிய கவாஸ்கர்
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ரிஷப்பண்ட் 2 இன்னிங்சிலும் (134 ரன், 118 ரன்) சதம் அடித்தார்.
- மெல்போர்ன் டெஸ்டில் ரிஷப்பண்டின் மோசமான ஷாட்டை கவாஸ்கர் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.
தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர்.
இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து ரிஷப் பண்ட் அசத்தினார். இதன் மூலம் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த இந்தியாவின் முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும், இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 7-வது இந்திய வீரர் ரிஷப்பண்ட் ஆவார்.
இந்த நிலையில் ரிஷப்பண்ட் ஆட்டத்தை முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான கவாஸ்கர் பாராட்டியுள்ளார். அவர் சூப்பர், சூப்பர், சூப்பர் என்று 3 முறை கூறி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, 'ரிஷப்பண்டின் ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது. இளம் வீரரான அவரது ஆட்டம் முற்றிலும் அருமையாக இருந்தது' என்றார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய பயணத்தில் மெல்போர்ன் டெஸ்டில் ரிஷப்பண்டின் மோசமான ஷாட்டை கவாஸ்கர் முட்டாள், முட்டாள், முட்டாள் என்று 3 முறை கூறி கடுமையாக விமர்சித்து இருந்தார். தற்போது அவரை கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக ரிஷப்பண்ட் கூறும்போது, 'பலவீனங்களை சரி செய்து மீண்டும் வெற்றிகளாக மாற்றும்போது அது மிகவும் நன்றாக இருக்கிறது. இது கடினமான செயல்முறையாகும். எனது பலவீனங்களை கடந்தது அதிர்ஷ்டமே. கடின உழைப்பு, கவனம், ஒழுக்கம் ஆகியவை இதில் சம்மந்தப்பட்டுள்ளன' என்றார்.