சதத்தின் மூலம் சச்சின், ரோகித் சாதனை முறியடிப்பு.. கோலியை சாதனையை சமன் செய்த சுப்மன் கில்
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் கில் சதம் விளாசினார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 10-வது சதத்தை பதிவு செய்தார் சுப்மன் கில்.
புதுடெல்லி:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள்.
இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த நிதிஷ் அதிரடியாக விளையாடி 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 10 சதம் ஆகும்.
இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை கில் (10 சதம்) படைத்துள்ளார். அந்த பட்டியலில் ரோகித் 9 சதங்களுடன் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 7 சதங்களுடன் ஜெய்ஸ்வால் 3-வது இடத்தில் உள்ளார்.
மேலும் ஒரு காலண்டர் ஆண்டில் 5 சதங்கள் விளாசிய இந்திய கேப்டன்கள் வரிசையில் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். அந்த பட்டியலில் சுப்மன் கில் 5 சதங்களுடன் 3 - வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 2017-ம் ஆண்டிலும் 2018-ம் ஆண்டிலும் 5 சதங்கள் விளாசி முதல் இரண்டு இடங்களில் உள்ளார். இவர் 2016 -ம் ஆண்டில் 4 சதங்கள் விளாசியிருந்தார்.
சச்சின் டெண்டுல்கர் 1997-ம் ஆண்டு இந்திய கேப்டனாக 4 சதங்கள் அடித்திருந்தார். அவர் சாதனையை கில் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.