கிரிக்கெட் (Cricket)

பும்ராவின் இடத்தை மற்ற பந்துவீச்சாளர்கள் நிரப்புவர்: சுப்மன் கில் பேட்டி

Published On 2025-06-06 00:25 IST   |   Update On 2025-06-06 00:25:00 IST
  • இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
  • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.

மும்பை:

இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:

ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி இருக்கும்.

நீண்ட காலம் சிறப்பாக விளையாடிய இரு முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது.

அவர்களது இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. சீனியர் வீரர்கள் இல்லாமல் விளையாட பழகி வருகிறோம்.

மற்றபடி டெஸ்ட் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட உடன் திகைத்து விட்டேன்.

இது மிகப்பெரிய பொறுப்பு. இதற்கான சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். கேப்டன் பணியில் எனக்கென ஸ்டைல் எதுவும் இல்லை.

அணியின் மற்ற வீரர்களின் பலம், பலவீனங்களை அவர்களுக்கு தெரிவிக்க முயற்சிப்பேன். அணியில் தங்களது இடம் பாதுகாப்பானது என்பதை அவர்கள் உணர வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயல்படுவர்.

டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் ஆர்டர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்திய வீரர்கள் இரு அணியாக பிரிந்து பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளோம். பும்ரா விளையாடினால் சிறப்பாக இருக்கும். அவர் இல்லாதபோது சமாளிக்கத் தேவையான பவுலர்கள் அணியில் உள்ளனர்.

என்னைப் பொறுத்தவரையில் சராசரிகளை நம்புவது இல்லை. கேப்டனாக, மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முயற்சிப்பேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News