கிரிக்கெட் (Cricket)

நிசாங்கா அபார சதம்: இலங்கை அசத்தல் வெற்றி- ஆஸ்திரேலியாவின் சூப்பர் 8 சுற்று வாய்ப்பு மங்கியது..!

Published On 2026-02-16 22:27 IST   |   Update On 2026-02-16 22:27:00 IST
  • பதும் நிசாங்கா சதம் விளாசினார்.
  • குசால் மெண்டிஸ் அரைசதம் அடித்தார்.

டி20 உலகக் கோப்பையில் இலங்கை- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி கண்டியில் நடைபெற்றது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது மிட்செல் மார்ஷ் (54), டிராவிஸ் ஹெட் (56) ஆகியோரின் அரைசதத்தால் ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. பதும் நிஷாங்கா, குசால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். குசால் பெரேரா 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து நிஷாங்கா உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிசாங்கா 32 பந்தில் அரைசதமும், குசால் மெண்டிஸ் 35 பந்தில் அரைசதமும் அடித்தனர்.

குசால் மெண்டிஸ் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பவன் ரத்னாயகே களம் இறங்கினார். பதும் நிசாங்கா அரைசதத்தை வெற்றிகரமாக சதமாக மாற்றினார். அவர் 52 பந்தில் சதம் விளாசினார். இந்த டி20 உலகக் கோப்பையில் முதல் சதம் இதுவாகும். இவரது சதத்தால் இலங்கை 18 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நிசாங்கா 100 ரன்களுடனும், ரத்னயகே 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு மிகவும் மங்கியுள்ளது.

Tags:    

Similar News