மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இதுவரை இல்லாத பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி
- இந்த தொகை 2023 ஆண்கள் உலகக் கோப்பையின் மொத்த பரிசுத்தொகையை விடவும் அதிகமாக உள்ளது.
- 5-வது மற்றும் 6-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு தலா ரூ. 6.18 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி செப்டம்பர் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த போட்டிகள் இந்தியாவில் குவாஹாட்டி, இந்தோர், நவி மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் இலங்கையில் கொழும்பு நகரத்திலும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான தொடருக்கான பரிசுத் தொகையாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதன்படி இந்த தொடருக்கான பரிசுத்தொகையாக ரூ.122 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய பதிப்பை விட 297% அதிகமாகும்.
முக்கியமாக, இந்த தொகை 2023 ஆண்கள் உலகக் கோப்பையின் மொத்த பரிசுத்தொகையை விடவும் அதிகமாக உள்ளது.
அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.39.55 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.19.77 கோடி. அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு ரூ.9.89 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
5-வது மற்றும் 6-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு தலா ரூ. 6.18 கோடியும் 7-வது மற்றும் 8-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு ரூ.2.47 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.