கிரிக்கெட் (Cricket)

மெல்போர்ன் டெஸ்ட் ஆடுகளம் திருப்தியற்றது- தகுதி இழப்பு புள்ளி விதித்து ஐ.சி.சி. நடவடிக்கை

Published On 2025-12-30 08:39 IST   |   Update On 2025-12-30 08:39:00 IST
  • குறுகிய நாளில் போட்டி முடிந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.60 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
  • இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.

மெல்போர்னில் உள்ள எம்.சி.ஜி. ஸ்டேடியத்தில் நடந்த ஆஷஸ் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. கோடை காலத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த டெஸ்ட் வெறும் 2 நாளில் முடிந்தது ரசிகர்களை மட்டுமின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரு நாளில் மட்டும் ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளித்தனர். குறுகிய நாளில் போட்டி முடிந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.60 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இன்னொரு பக்கம் மெல்போர்ன் ஆடுகளம் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு உகந்த ஆடுகளம் அல்ல என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சாடினார்.

பொதுவாக ஒரு டெஸ்ட் போட்டி முடிந்ததும் அந்த ஆடுகளத்தன்மையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் மதிப்பிடுவது உண்டு. இதன்படி மெல்போர்ன் ஆடுகளத்தை தரமற்றது என்று ஐ.சி.சி. முத்திரை குத்தியுள்ளது.

ஐ.சி.சி. போட்டி நடுவர் ஜெப் குரோவ் கூறுகையில், 'மெல்போர்ன் எம்.சி.ஜி. ஆடுகளம் அளவுக்கு அதிவேகமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. முதல் நாளில் 20 விக்கெட்டுகளும், 2-வது நாளில் 16 விக்கெட்டுகளும் சரிந்தன. ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதம் அடிக்கவில்லை. ஐ.சி.சி.யின் மைதான பிட்ச் மற்றும் அவுட்பீல்டு கண்காணிப்பு வழிகாட்டுதலின்படி இது ஒரு திருப்தியற்ற ஆடுகளம். அதனால் இந்த மைதானத்திற்கு ஒரு தகுதி இழப்பு விதிக்கப்படுகிறது' என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு இங்கு நடந்த கடைசி 3 டெஸ்ட் போட்டிகளின் போது இது சிறந்த ஆடுகளம் என்று ஐ.சி.சி. பாராட்டியிருந்தது.

ஐ.சி.சி. விதிப்படி ஒரு மைதானம் 5 ஆண்டுக்குள் 6 தகுதி இழப்பு புள்ளியை பெற்றால் அந்த மைதானத்தில் ஓராண்டு சர்வதேச போட்டி நடத்த தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஜேம்ஸ் அல்சோப் கூறுகையில், '3 மற்றும் 4-வது நாள் போட்டிக்காக டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் உலகம் முழுவதும் போட்டியை காண ஆவலுடன் காத்திருந்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானோம். இது வழக்கமான எம்.சி.ஜி.யின் ஆடுகளம் போல் அல்லாமல் பேட்டிங்குக்கும், பந்து வீச்சுக்கும் இடையிலான சமநிலையை வழங்கவில்லை. சமீபத்தில் ஆண்டுகளில் அருமையான டெஸ்ட் போட்டி ஆடுகளங்களை தயாரித்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் ஊழியர்களை பாராட்டுகிறோம். அடுத்த ஆண்டு இங்கு நியூசிலாந்துக்கு எதிரான 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டியும், 2027-ம் ஆண்டு மார்ச்சில் டெஸ்ட் போட்டியின் 150-வது ஆண்டை கொண்டாடும் வகையிலான இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டும் நடக்க உள்ளது. இந்த போட்டிகளுக்கு அவர்கள் ஆகச்சிறந்த ஆடுகளங்களை வழங்குவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்' என்றார்.

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.

Tags:    

Similar News