டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்தியா இந்த 3 விஷயங்களை செய்யவேண்டும் - மஞ்ச்ரேக்கர் கருத்து
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா மிகப்பெரிய தோல்வியை சந்தித்து உள்ளது.
- அரைஇறுதிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெற எஞ்சி உள்ள 2 ஆட்டங்களிலும் (ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ்) கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி 3 விஷயங்களில் முன்னேற்றம் காண வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா மிகப்பெரிய தோல்வியை சந்தித்து உள்ளது. இத்தொடரில் லீக் சுற்றுக்கு பிறகு இந்தியா முதல் வலுவான அணியை சந்தித்தது. ஆனால் அதில் இந்திய வீரர்கள் உண்மையில் சிறப்பாக விளையாடவில்லை. இருந்த போதிலும் அரைஇறுதிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு இந்திய அணி 3 பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது.
சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இந்திய வீரர்கள் போராடுகிறார்கள். அதை சரிசெய்ய வேண்டும். நல்ல சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் வகையில் பேட்டிங் வரிசையை மறு சீரமைக்க முயற்சி செய்ய வேண்டும். திலக் வர்மா போன்றவர்கள், கொஞ்சம் சிரமப்பட்டு வருவதால் அவர்களது வரிசையை மாற்ற வேண்டும்.
வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது வேகத்தை குறைத்து பந்து வீசியபோது இந்திய வீரர்கள் சிரமப் பட்டனர். இதில் அதிகம் சிரமப்பட்டவர் கேப்டன் சூர்யகுமார் யாதவ்தான். எனவே இதில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னேற்ற காண வேண்டும்.
அதிக பேட்ஸ்மேன்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக இந்தியா தனது பந்துவீச்சுத் தாக்குதலை வலுப்படுத்த வேண்டும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவை சேர்த்திருந்தால் முடிவு மாறி இருக்கலாம். அவர் விளையாடியிருந்தால், இந்தியா ஒரு முக்கியமான நேரத்தில் டேவிட் மில்லரை வெளியேற்றியிருக்கலாம். எனவே இந்த 3 பகுதிகளில் சிறப்பாக பணியாற்றினால் இறுதிச் சுற்றுகளுக்குள் நுழைந்து பட்டத்தை வெல்ல முடியும்.
இவ்வாறு மஞ்ச்ரேக்கர் கூறினார்.