ஐ.பி.எல்.(IPL)

இறுதிப்போட்டியில் ஆர்சிபியுடன் மோதுவது யார்?: பஞ்சாப்-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

Published On 2025-06-01 02:13 IST   |   Update On 2025-06-01 02:13:00 IST
  • ஐ,பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது.
  • குவாலிபையர்1 ஆட்டத்தில் ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது.

அகமதாபாத்:

ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர்1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.

அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டிக்கு மோதப் போவது பஞ்சாப்பா, மும்பையா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 26-ம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். அதே நேரத்தில் பஞ்சாப் அணி குவாலிபையர் 1 போட்டியில் பெங்களூரு அணியிடம் 101 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது.

மும்பை இந்தியன்ஸ் வலுவாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது பஞ்சாப்புக்கு சவாலானதே. 2-வது முறையாக பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதற்கு முன் 2014-ல் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் (517 ரன்), கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் (516 ரன்), பிரியான்ஷ் ஆர்யா (431 ரன்), அர்ஷ்தீப் சிங் (18 விக்கெட்), ஜோஷ் இங்கிலீஷ், வதேரா, ஷசாங்க் சிங் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப்புக்கு பதிலடி கொடுத்து 7-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வேட்கையில் இருக்கிறது.

அந்த அணியின் பந்து வீச்சில் பும்ரா துருப்புச்சீட்டாக இருக்கிறார். அவர் இதுவரை 18 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சூர்யகுமார் யாதவ் (673 ரன்), ரோகித் சர்மா (410 ரன்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா, பேர்ஸ்டோவ், நமன் தீர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், டிரென்ட் போல்ட் (21 விக்கெட்), சாண்ட்னர் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

இரு அணிகளும் வெற்றி பெற போராடும் என்பதால் குவாலிபையர் 2 ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம்.

Tags:    

Similar News