எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் இவர்தான்: மனம் திறந்த விராட் கோலி
- நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
- ஆர்சிபி அணி 7 போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
பெங்களூரு:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 7 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
தொடர்ந்து 18-வது ஆண்டாக பெங்களூரு அணியில் விளையாடி வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலி நடப்பு சீசனில் 10 போட்டிகளில் 6 அரை சதம் உள்பட 443 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில், ஆர்.சி.பி.யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் விராட் கோலி பங்கேற்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் டிரெய்லர் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. அந்த டிரெய்லரில் விராட் கோலி பேசியதாவது:
ஆரம்பத்தில் நான் விளையாடிய அனைத்து வீரர்களிலும், மார்க் பவுச்சர் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
எனது பலவீனங்கள் என்னவாக இருக்கும் என்பதை அவர் கண்டுபிடித்தார். அடுத்த கட்டத்திற்கு நான் முன்னேற வேண்டும் என்றால், அவரிடம் எதுவும் கேட்காமல் நான் இதைச் செய்யவேண்டும்.
அவர் என்னிடம் ஒருமுறை, 3 அல்லது 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு நான் வர்ணனையாளராக வரும்போது, நீங்கள் (கோலி) இந்தியாவுக்காக விளையாடுவதை நான் பார்க்கவில்லை என்றால், உங்களுக்கு நீங்களே தீங்கு விளைவிப்பீர்கள் என சொன்னார். என்னுடன் நடத்திய உரையாடல்களால் என்னை அவர் மிகவும் திகைக்க வைத்தார்.
ரசிகர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பை, எந்த வெள்ளிப் பாத்திரமோ அல்லது எந்தக் கோப்பையோ நெருங்க முடியாது என்று நினைக்கிறேன்
எனக்கு எந்த விதத்திலும் நிலைமை மாறிவிட்டதாக நான் நினைக்கவில்லை. புதிய வீரர்கள் குழு தயாராக இருக்கிறது. அவர்களுக்கு நேரம் தேவை. அவர்களுக்கு பரிணமிக்க, அழுத்தத்தைக் கையாள, உலகின் பல்வேறு பகுதிகளில் விளையாட, உலகக் கோப்பை வரும்போது அவர்கள் தயாராக இருப்பதாக உணரும் அளவுக்கு போதுமான ஆட்டங்களை விளையாட 2 வருட சுழற்சி தேவை. இதைப் புரிந்துகொண்டே டி20 போட்டிகளை விட்டு வெளியேறும் முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.