எனக்கும் சுப்மன் கில்லுக்கும் இடையில் அதிக புரிதல் உள்ளது: சாய் சுதர்சன்
- நாம் பேசும் ஒரு விசயம் விக்கெட்டுக்கு இடையில் ஓடுவது.
- அதையும் தாண்டி நான் தவறு செய்தால் சுப்மன் கில் சுட்டிக் காட்டுவார்.
ஐபிஎல் 2025 சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சாய் சுதர்சன் (108), சுப்மன் கில் (93) அபாரமாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 19 ஓவரில் சேஸிங் செய்து குஜராத் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் குவித்த சாய் சுதர்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
அத்துடன் 617 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றியுள்ளார். சுப்மன் கில் 601 ரன்கள் அடித்துள்ளார். சுப்மன் கில்- சாய் சுதர்சன் ஜோடி இந்த தொடரில் அபாரமாக விளையாடி வருகிறது. இதற்கு எங்களுடைய புரிதல்தான் காரணம் என சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சாய் சுதர்சன் கூறியதாவது:-
எனக்கும் சுப்மன் கில்லுக்கும் இடையில் அதிக அளவில் புரிதல் உள்ளது. விக்கெட்டுக்கு இடையில் ஓடுவது நாம் பேசும் ஒரு விசயம். அதையும் தாண்டி நான் ஒரு தவறு செய்தால், அவர் சுட்டிக்காட்டுவார். அதேபோல்தான் சுப்மன் கில் ஒரு தவறு செய்தாலும் நான் சுட்டிக்காட்டுவேன். இந்த சேஸிங் அணியின் வெற்றிக்கு உதவியதால் நான் சிறந்ததாக உணர்கிறேன்.
இவ்வாறு சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.