சாய் கிஷோரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன்- ரஷித் கான்
- சாய் கிஷோரும் நானும் போட்டிகளுக்கு முன்பு நிறைய பேசிக் கொள்வோம்.
- நானும் அவரைப் போல பந்து வீச முயற்சிக்கிறேன்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் ரஷித் கான் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு விக்கெட் எடுக்க கூட முடியாமல் திணறினார். மேலும் அதிக ரன்களையும் விட்டுக்கொடுத்தார். நேற்றைய போட்டியில் ரஷித் கான் 4 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் இந்திய ஆடுகளங்களில் எப்படி பந்து வீச வேண்டும் என்ற சாய் கிஷோரின் அறிவையும் பெற்றுக் கொண்டேன் என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சாய் கிஷோரும் நானும் போட்டிகளுக்கு முன்பு நிறைய பேசிக் கொள்வோம். அவரிடம் நான் பிட்சுகளை மட்டும் நம்பி நாம் விளையாட முடியாது. பிட்சில் சரியான இடத்தில் நாம் பந்தை பிட்ச்செய்து வீச வேண்டும் என்று சொன்னேன்.
அவர் பந்துவீசும் விதம் மற்றும் பந்துவீச்சு மாறுபாடுகளை நான் விரும்புகிறேன். அவரிடம் இருந்து அவற்றை கற்றுக் கொள்கிறேன். நானும் அவரைப் போல பந்து வீச முயற்சிக்கிறேன்.
என்னுடைய அனுபவத்தை நான் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அதேபோல, இந்திய ஆடுகளங்களில் எப்படி பந்து வீச வேண்டும் என்ற சாய் கிஷோரின் அறிவையும் நான் பெற்றுக் கொண்டேன்.
என்று ரஷித் கான் கூறினார்.