முதல் டி20 போட்டியிலேயே முடித்து விட்ட இந்தியா.. பாதி கிணறு கூட தாண்டாமல் தென் ஆப்பிரிக்கா தோல்வி
- முதல் ஓவரின் 2-வது பந்திலேயே டி காக், அர்ஸ்தீப் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
- மறுமுனையில் பிரெவிஸ் கண்ணும் கருத்துமாக விளையாடினார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.
திலக் வர்மா 26 ரன்னும், அக்சர் படேல் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 28 பந்தில் 59 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 6 பவுண்டரி அடங்கும்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டும், லூதோ சிபம்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 176 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.
முதல் ஓவரின் 2-வது பந்திலேயே டி காக், அர்ஸ்தீப் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அர்ஸ்தீப் பந்துவீசிய 2-வது ஓவரில் ஸ்டப்ஸ் 14 ரன்களில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மார்க்ரம் 14 ரன்னில் சுருண்டார். டேவிட் மில்லர் 1 ரன், டோனோவன் பெரீரா 5 ரன்கள், மார்கோ ஜான்சன் 12 ரன்கள் மட்டும் ஸ்கோர் செய்து வெளியேற மறுமுனையில் பிரெவிஸ் கண்ணும் கருத்துமாக விளையாடினார்.
ஒரு வழியாக அவரும் 22 ரன்களில் மூட்டையை கட்ட 12.3 ஓவரில் 76 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வெற்றியை பறிகொடுத்தது. இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.