சதம் விளாசிய ராகுல், ஜடேஜா, ஜூரல்: 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 448 ரன்கள் குவிப்பு
- ராகுல், ஜடேஜா, ஜூரல் ஆகியோர் சதம் விளாசினர்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 36 ரன்னில் அவுட் ஆனார். சாய் சுதர்சன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அரை சதம் அடித்தார். இதனால் நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 38 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று காலை இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ராகுல், கில் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரை சதம் விளாசிய கையோடு கில் (50) ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய கே.எல். ராகுல் சதம் விளாசி அசத்தினார். அவரும் 100 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து ஜூரல் மற்றும் ஜடேஜா ஜோடி சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர்கொண்டு இருவரும் சதம் அடித்து அசத்தினர். 2-ம் நாள் ஆட்ட நேர முடிவுக்கு சில ஓவர்களே இருந்த நிலையில் ஜூரல் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் குவித்தது.ஜடேஜா 104 ரன்னுடனும் சுந்தர் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.