ஃபக்கர் ஜமான் கேட்ச் விவகாரம்: ஐசிசி-யிடம் புகார் அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
- ஹர்திக் பாண்ட்யா ஓவரில் ஃபக்கர் ஜமான் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
- கீப்பர் சஞ்சு சாம்சன் பிடித்த கேட்ச் சர்ச்சையானது.
துபாய்:
ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியின் நேற்றைய போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் 3-வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா பந்து வீசினார். அந்த பந்தை ஃபக்கர் ஜமான் அடிக்க முயன்றார். பந்து பேட்டில் பட்டு கீப்பரிடம் சென்றது. அதை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 'கேட்ச்' பிடித்தார். பந்து தரையில் பட்டதா இல்லையா என்ற சந்தேகத்தில், கள நடுவர்கள் மூன்றாவது நடுவரின் உதவியை நாடினர். அப்போது ஃபக்கர் ஜமான் 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி வந்தார்.
தொலைக்காட்சி நடுவர் அந்த 'கேட்ச்'சை ஆய்வு செய்தார். இறுதியில், ஃபக்கர் ஜமானுக்கு அவுட் என்று தீர்ப்பளித்தார். இந்த முடிவு, ஃபக்கர் ஜமானை மட்டுமல்லாது, பாகிஸ்தான் அணி மற்றும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களிலும் இந்தத் தீர்ப்பு குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் எழுந்தன.
இந்நிலையில் கள நடுவரின் தீர்ப்பில் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), தொலைக்காட்சி நடுவர் (TV Umpire) தவறான தீர்ப்பை வழங்கியதாகக் கூறி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளது.
இந்தச் சர்ச்சைக்குரிய தீர்ப்பு போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் தரப்பு நம்புவதால், தற்போது விஷயம் ஐசிசி-யின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.