கிரிக்கெட் (Cricket)

டிரா விவகாரம்: பென் ஸ்டோக்ஸ் செயலுக்கு கண்டனம் தெரிவித்த கம்பீர்

Published On 2025-07-28 19:27 IST   |   Update On 2025-07-28 19:27:00 IST
  • இந்த இரண்டு வீரர்களும் சதம் அடிக்கத் தகுதியானவர்கள். அதனால் அவர்கள் அதைச் செய்தார்கள்.
  • போட்டியை முடித்து ஆடுகளத்தை விட்டுச் செல்வார்களா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முடிவில் இந்திய அணி போட்டியை டிரா செய்யும் நிலைக்கு கொண்டு சென்றது. அப்போது, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா பேட்டிங் செய்து வந்தனர். ரவீந்திர ஜடேஜா 90 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களுடனும் இருந்தபோது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போட்டியை டிரா செய்து கொள்ளலாம் என அழைத்தார்.

அப்போது 14 ஓவர்கள் மீதமிருந்தன. அந்தச் சூழ்நிலையில் எந்த ஒரு அணியாலும் வெற்றி பெற முடியாது என்பதால், ஸ்டோக்ஸ் அந்த முடிவை எடுத்தார். அதே சமயம், சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் போட்டியை முடித்துக்கொள்ள விரும்பவில்லை. இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்த நிலையில், அதை சதமாக மாற்ற நினைத்தனர். அதனால், பென் ஸ்டோக்ஸ் விடுத்த அழைப்பிற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக, போட்டி முடிந்தவுடன் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜாவுக்குக் கை குலுக்க மறுத்தார். இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஒருவர் 90 ரன்கள் எடுத்திருக்கும்போதும், மற்றொருவர் 85 ரன்கள் எடுத்திருக்கும்போதும் போட்டியை முடிக்கலாமா? அவர்கள் சதம் அடிக்கத் தகுதி இல்லாதவர்களா? என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இங்கிலாந்து வீரர்களும் 90 ரன்கள் மற்றும் 85 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருக்கும்போது போட்டியை முடித்து ஆடுகளத்தை விட்டுச் செல்வார்களா? ஒருவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடிக்கும் வாய்ப்பில் இருக்கும்போது அதை நாம் அனுமதிக்க வேண்டாமா? இங்கிலாந்து அணி இப்படித்தான் விளையாடும் என்றால் அது அவர்கள் விருப்பம். ஆனால், இந்த இரண்டு வீரர்களும் சதம் அடிக்கத் தகுதியானவர்கள். அதனால் அவர்கள் அதைச் செய்தார்கள்.

என்று கவுதம் கம்பீர் கூறினார்.

Tags:    

Similar News