இந்திய அணியில் முழு அதிகாரம் வேண்டும்- பிசிசிஐ-யிடம் கம்பீர் கோரிக்கை
- பும்ரா அடிக்கடி காயம் அடைவதால் அவரை கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ. விரும்பவில்லை.
- சுப்மன்கில் கேப்டனாக அதிகமான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 4-ந் தேதியுடன் இந்த தொடர் முடிவடைகிறது.
விராட்கோலி, ரோகித் சர்மா மற்றும் ஆர்.அஸ்வின் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய பயணத்தின்போது அஸ்வின் பாதியில் ஓய்வு முடிவை அறிவித்தார்.
ஐ.பி.எல். போட்டி நடைபெற்று இருக்கும்போது ரோகித் சர்மா கடந்த 7-ந் தேதி டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அதை தொடர்ந்து கடந்த 12-ந் தேதி யாருமே எதிர்பார்க்காத வகையில் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனான விராட்கோலி டெஸ்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் சீனியர் வீரர்கள் இல்லாத இந்திய அணியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தனக்கு முழு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ.) தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்வி, ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தோல்வி போன்று மீண்டும் நடைபெறுவதை தடுக்க தனக்கு முழு சுதந்திரமும், அதிகாரமும் வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அணியில் உள்ள வீரர்களில் தற்போது பும்ரா மட்டுமே காம்பீருக்கு சவாலாக இருப்பார். அவரது செயல்பாடுகளுக்கு பும்ரா முட்டுக்கட்டை போடுவார்.
அணியின் கேப்டனாக நியமிக்கப்பட இருக்கும் சுப்மன்கில் இளம் வீரர், காம்பீர் சொல்வதை கேட்பார். அவருக்கு சவால் விடக்கூடிய நிலையை சுப்மன்கில் இன்னும் எட்டவில்லை.
பும்ரா அடிக்கடி காயம் அடைவதால் அவரை கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ. விரும்பவில்லை. சுப்மன்கில் கேப்டனாக அதிகமான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்ட படுதோல்வியால் காம்பீருக்கான சில அதிகாரங்களை பி.சி.சி.ஐ. பறித்து இருந்தது. தற்போது அணி தனது முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். காம்பீரின் கோரிக்கையை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளுமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.