அபிஷேக், பும்ரா இல்லை... டி20 உலக கோப்பையில் இவர்தான் இந்திய அணியின் முக்கிய வீரர் - டிவில்லியர்ஸ்
- 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
- 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்திய எந்த நாடும் இதுவரை வென்றதில்லை.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணி கடந்த 20-ந்தேதி அறிவிக்கப்பட்டது. நடப்பு சாம்பியனான இந்திய அணி கோப்பையை தக்க வைத்துக் கொள்ளுமா என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்திய எந்த நாடும் இதுவரை வென்றதில்லை. அதை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி மாற்றி புதிய வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருப்பார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் டி.வில்லியர்ஸ் கணித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "ஹர்திக் பாண்ட்யாவால் எந்த சூழ்நிலையிலும் பந்து வீச முடியும். பேட்டிங்கில் எந்த வரிசையிலும் களம் இறங்கி அதிரடியாக ஆடக் கூடியவர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அவர் மிகவும் முக்கிய வீரராக இருப்பார். ஹர்திக் பாண்ட்யா 3 அல்லது அதற்கு மேற்பட்ட ஓவர்கள் பேட்டிங் செய்தால் எதிரணிக்கு தோல்விதான் ஏற்படும். இதனால் அவரை வெளி யேற்ற வேண்டும் என்ற உணர்வுடன் எதிர் அணி வீரர்கள் இருப்பார்கள்" என்று கூறினார்.
20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.