பாகிஸ்தான் வீரர்களை போன்று வங்கதேச வீரர்களையும் ஐபிஎல் விளையாட அனுமதிக்கக் கூடாது: பாஜக தலைவர்
- வங்கதேசத்தில் நடைபெற்று கொண்டிருப்பது யாருக்கும் நல்லது அல்ல.
- வங்கதேசத்தில் முன்கூட்டியே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், கொல்த்தாக நைட் ரைடர்ஸ் அணி முஸ்தாபிசுர் ரகுமானை ஏலம் எடுத்துள்ளதாக, இந்த அணியின் உரிமையாளர் ஷாருக் கான் மீது பாஜக மற்றும் இந்து அமைப்புத் தலைவர்கள் கடுமையாக குற்றம்சாட்டினர். அவரை துரோகி என்று குறிப்பிட்டனர். இது பெரிய விவகாரமாக வெடிக்க பிசிசிஐ, முஸ்தாபிசுர் ரகுமானை விடுவிக்க கே.கே.ஆர். அணியிடம் கேட்டுக்கொண்டது. பிசிசிஐ உத்தரவின்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அவரை விடுவித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்களை போன்று, வங்கதேச வீரர்களை ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதிக்கக் கூடாது என மேற்கு வங்க மாநில முன்னாள் பாஜக தலைவர் திலிப் கோஷ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திலிப் கோஷ் கூறியதாவது:-
வங்கதேசத்தில் நடைபெற்று கொண்டிருப்பது யாருக்கும் நல்லது அல்ல. இந்திய அரசாங்கம் தனது கடமையைச் செய்து வரும் நிலையில், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களால் மேற்கு வங்க மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இது மனிதாபிமானமற்ற செயல். இதற்குப் பின்விளைவுகள் இருக்கும்.
வங்கதேசத்தில் முன்கூட்டியே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஒரு நிலையான அரசாங்கம் அமைய வேண்டும். மேலும் சட்டம் ஒழுங்கு மீட்டெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் உயிர்களும் உடைமைகளும் பாதுகாக்கப்படும். எல்லைப் பதட்டங்களும் குறையும்.
நான் பிசிசிஐ-க்கு நன்றி தெரிவிக்கிறேன். பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் விளையாட அனுமதிக்கப்படாதது போலவே, வங்கதேச கிரிக்கெட் வீரர்களும் அனுமதிக்கப்படக் கூடாது. இந்தக் கோரிக்கை கொல்கத்தாவில் இருந்து வந்தது, அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.