null
ஐசிசி தொடர்களில் இந்தியா- பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இடம்பெறக் கூடாது என பிசிசிஐ கடிதம்?
- பாகிஸ்தானுடன் இந்தியா நேரடி கிரிக்கெட் விளையாடுவதில்லை.
- பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஐசிசி தொடர்களில் விளையாட வேண்டாம் என பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது.
எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் போட்டி கிடையாது என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. இதனால் ஐசிசி தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறது. இந்த வருட தொடக்கத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டது. இதனால் இந்திய போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ஐசிசி தொடர்களில் இந்தியா- பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இடம்பெறக் கூடாது என ஐசிசி-க்கு பிசிசிஐ கடிதம் எழுதியாக செய்திகள் வெளியானது.
ஆனால் இந்த செய்தியில் உண்மையில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லாவிடம் கேட்டபோது, "இந்த சூழ்நிலையில் அரசின் ஆலோசனைகளை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளும்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பிசிசிஐ அதிகாரி, இதுபோன்ற சூழ்நிலை தனக்கு புதிது. தற்போதைய பொது மனநிலையை பிசிசிஐ அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். பரவி வரும் செய்திகளுக்கு எந்த மதிப்பும் இல்லை எனத் தெரிவித்தார்.