மகளிர் உலக கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
- போட்டி நடைபெறும் நவிமும்பையில் மழை பெய்ய லேசான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.
இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
7 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக வலம் வருகிறது. 2017-ம் ஆண்டு உலகக் கோப்பை அரைஇறுதியில் இந்தியாவிடம் தோற்ற ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 15 வெற்றியை குவித்து வீறுநடை போடுகிறது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 60 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 49-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டி நடைபெறும் நவிமும்பையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய லேசான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.