விளையாட்டு
4 விருதுகளை தட்டி சென்ற பட்லர்

ஐ.பி.எல். கிரிக்கெட் 2022- 4 விருதுகளை தட்டி சென்ற பட்லர்

Published On 2022-05-30 10:13 IST   |   Update On 2022-05-30 10:22:00 IST
ஐபிஎல் 2022 போட்டி தொடரில் வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
அகமதாபாத்:

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 133 ரன்னே எடுத்தது. அதிகபட்சமாக ஜோஸ்பட்லர் 39 ரன் எடுத்தார்.

குஜராத் தரப்பில் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் விளையாடிய குஜராத் 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வென்றது. சுப்மன் கில் 45 ரன்னும் ஹர்த்திக் பாண்ட்யா 34 ரன்னும், டேவிட் மில்லர் 32 ரன்னும் எடுத்தனர்.

புதுமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தி உள்ளது.

கோப்பை வென்ற குஜராத் அணிக்கு ரூ.20½ கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.12½ கோடி வழங்கப்பட்டது.

3-ம் இடம் பெற்ற பெங்களுரு அணிக்கு ரூ.7 கோடி, 4-வது இடத்தை பிடித்த லக்னோ அணிக்கு ரூ.6.5 கோடி வழங்கப்பட்டது.

இத்தொடரில் அதிக ரன் (863) குவித்த ராஜஸ்தானின் ஜோஸ்பட்லருக்கு ரூ.10 லட்சமும், அதிக விக்கெட் (26) கைப்பற்றிய ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர சாகலுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டது.

அதிக சிக்சர் (45) அடித்த ஜோஸ் பட்லர் ரூ.10 லட்சம் பெற்றார்.

ஆட்டத்தை மாற்றுபவர் விருது ஜோஸ் பட்லர் (ரூ.10 லட்சம் பரிசு) பெற்றார்.

தொடர் நாயகன் விருதையும் ஜோஸ் பட்லர் கைப்பற்றினார்.

வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் (ஐதராபாத்) தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

சிறந்த கேட்ச் விருது லக்னோ அணி வீரர் எவன் லீவிஸ் (கொல்கத்தாவுக்கு எதிராக) பெற்றார்.

இறுதிப் போட்டியில் 157.3 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய குஜராத்தின் பெர்குசன் இத்தொடரின் அதிக வேக பந்துவீச்சாளர் விருதை வென்றார்.
Tags:    

Similar News