விளையாட்டு
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
குயின்ஸ்டவுன்:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒரே ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி குயின்ஸ்டவுனில் இன்று நடந்தது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 156 ரன் இலக்காக இருந்தது. நியூசிலாந்து தரப்பில் சுசி பேட்ஸ் 36 ரன்னும், கேப்டன் சோபி டெவின் 31 ரன்னும் எடுத்தனர். பூஜா, தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டும், ராஜேஸ்வரி கெய்க்வாட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது. இதனால் 18 ரன்னில் இந்தியா தோல்வியை தழுவியது.
யாத்திகா பட்டியா அதிக பட்சமாக 26 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஜெஸ்கெர், லியா, அமலியா, ஹாய்லே ஜென்சன் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
அடுத்து இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 12-ந் தேதி நடக்கிறது.