விளையாட்டு
இந்திய அணியின் சுழலில் சிக்கியது வெஸ்ட் இண்டீஸ் - 176 ரன்னில் ஆல் அவுட்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அகமதாபாத்:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்கத்தில் பவுண்டரி அடிக்காத ஹோப் (8) சிராஜ் வீசிய 3-வது ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாசினார். அடுத்த பந்தும் பவுண்டரிக்கு விரட்டும் போது போல்ட் என்ற முறையில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த பிராவோ - கிங் ஜோடி பொறுமையுடன் விளையாடியது. இந்த ஜோடியை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். ஓரே ஓவரில் இரண்டு (பிராவோ 18 - கிங் 13) பேரையும் வீழ்த்தி அசத்தினார். இதேபோல சாஹலும் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நிக்கோலஸ் பூரன் 18 ரன்னிலும் பொல்லார்ட் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். அடுத்து ஹோசைன் 0 ரன்னிலும் வெளியேறினர்.
ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஹோல்டர் - அலன் ஜோடி சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. பொறுப்புடன் ஆடிய ஹோல்டர் அரை சதம் அடித்தார். இந்த ஜோடியையும் வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். ஆலன் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து சிறுது நேரத்திலேயே ஹோல்டரும் 57 ரன்னில் வெளியேறினார்.
கடைசியில் 43.5 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சாஹல் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் பிரிதிஷ் கிருஷ்ணா 2 விக்கெட்டும் சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.