செய்திகள்
லார்ட்ஸ் டெஸ்டில் மெர்சல் காட்டிய முகமது ஷமி- பும்ரா: வலுவான நிலையில் இந்தியா
முகமது ஷமி அரைசதம் அடிக்க, பும்ரா கெத்தாக இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்கொள்ள இந்தியா 259 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா கே.எல். ராகுலின் (129) சதத்தால் 364 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் (180 நாட்அவுட்) அபார ஆட்டத்தால் 391 ரன்கள் குவித்தது.
27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. கே.எல். ராகுல் (5), ரோகித் சர்மா (21), விராட் கோலி (20) ஆகியோர் விரைவாக ஆட்டமிழக்க இந்தியா 55 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால் 4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது.
நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷாப் பண்ட் 14 ரன்னுடனும், இஷாந்த சர்மா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஷாப் பண்ட் இந்திய அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 22 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இஷாந்த் சர்மா 16 ரன்னிலும் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணிக்கு 200 ரன்கள் கூட இலக்காக நிர்ணயிக்க முடியாத நிலையில் இந்தியா இருந்தது. ரிஷாப் பண்ட் ஆட்டமிழக்கும்போது இந்தியா 167 ரன்களே முன்னிலை பெற்றிருந்தது.
ஆனால், 9-வது விக்கெட்டுக்கு முகமது ஷமியுடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்தின் பந்து வீச்சை மிகவும் சிறப்பான எதிர்கொண்டு ரன்கள் குவித்தனர். இருவரையும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் ஆட்டமிழக்க செய்ய முடியவில்லை. பவுன்சர், ஸ்விங் என மிரட்டினர். ஆனால் இருவரும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் போன்று பேட்டிங் செய்தனர். சில கவர் டிரைவ் ஷாட்களை கச்சிதமாக ஆடியது காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
முகமது ஷமி 57 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்து அசத்தினார். கடைசி நாள் மதிய உணவு இடைவேளை வரை இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை. இந்தியா உணவு இடைவேளை வரை 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. முகமது ஷமி 52 ரன்களுடனும், பும்ரா 30 ரன்களும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 77 ரன்கள் குவித்துள்ளது.