இன்று தை அமாவாசை... முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்த மக்கள்
- திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.
- தாமிரபரணி நதிக்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் தை அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்று சென்றனர்.
இதே போல், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர். இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர்.
நாமக்கல் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்களது முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர்.
அதேபோல், நெல்லை, பாபநாசத்தில் தாமிரபரணி நதிக்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.