செய்திகள்
கிரேக் பார்கிளே

ஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் தேர்வு

Published On 2020-11-25 21:41 GMT   |   Update On 2020-11-25 21:41 GMT
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே தேர்வு செய்யப்பட்டார்.
துபாய்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) முதலாவது தனிப்பட்ட தலைவராக இருந்த இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகரனின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் கடந்த ஜூன் மாதம் அந்த பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இடைக்கால தலைவராக இம்ரான் கவாஜா இருந்து வந்தார்.

ஐ.சி.சி. புதிய தலைவர் தேர்தல் குறித்து பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டாலும் ஒருமித்த முடிவு எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடந்த அக்டோபர் 18-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் கிரிக்கெட் சங்க தலைவரும், இடைக்கால தலைவராக இருந்த இம்ரான் கவாஜா, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர் கிரேக் பார்கிளே ஆகியோர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.

ஐ.சி.சி.யின் 16 உறுப்பினர்கள் (டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 12 நாடுகள், 3 அசோசியேட் உறுப்பு நாடுகள், தனிப்பட்ட ஒரு பெண் இயக்குனர்) வாக்களிக்க உரிமை படைத்தவர்கள். அதில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெறுபவர் தான் புதிய தலைவராக தேர்வாக முடியும். மின்னணு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் சுற்றில் கிரேக் பார்கிளே 10 வாக்குகளும், இம்ரான் கவாஜா 6 வாக்குகளும் பெற்றனர்.

தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்காததால் நடத்தப்பட்ட 2-வது சுற்று வாக்கெடுப்பில் கிரேக் பார்கிளே 11 வாக்குகளையும், இம்ரான் கவாஜா 5 வாக்குகளையும் தன்வசப்படுத்தினார்கள்.

இதையடுத்து ஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த வக்கீலான கிரேக் பார்கிளே தேர்வானார். அவர் 2012-ம் ஆண்டு முதல் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக உள்ளார். கிரேக் பார்கிளேவுக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவாக இருந்தன. 2-வது சுற்றில் தென்ஆப்பிரிக்கா அளித்த வாக்கு அவரது வெற்றியை உறுதி செய்தது. இம்ரான் கவாஜாவுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு கரம் நீட்டின.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கிரேக் பார்கிளே கூறியதாவது:-

ஐ.சி.சி.யின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை கவுரவமாக கருதுகிறேன். எனக்கு ஆதரவு அளித்த சக டைரக்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து வலுவான வளர்ச்சியை நோக்கி கிரிக்கெட் ஆட்டத்தை கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறேன். எனது பதவியை ஒரு பாதுகாவலராக கருதி 104 ஐ.சி.சி. உறுப்பு நாடுகளின் சார்பில் ஆட்டத்துக்கு நிலையான எதிர்காலத்தை ஏற்படுத்த கடினமாக உழைப்பேன்.

2020-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2021-ம் ஆண்டில் நியூசிலாந்தில் நடக்க இருந்த பெண்கள் ஒருநாள் உலக கோப்பை போட்டி ஆகியவை 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2023-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற வேண்டிய ஒருநாள் உலக கோப்பை போட்டி சில மாதங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த போட்டிகளை எல்லாம் டெலிவிஷன் ஒளிபரப்பு நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த காலத்துக்குள் நடத்தப்பட வேண்டும். இதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இல்லையெனில் ஒளிபரப்பு நிறுவனங்கள் நமக்கு அபராதம் விதிக்கக்கூடும். இதன் மூலம் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும். இந்த போட்டிகள் மூலம் கிடைக்கும் வருவாயை தான் உறுப்பு நாடுகளின் திட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். அதனை தான் பல நாடுகள் அதிகம் நம்பி இருக்கின்றன.

உலக போட்டிகளை விட இரு நாடுகளுக்கு இடையிலான போட்டி தொடருக்கு தான் நான் ஆதரவானவன் என்று கூறுவது தவறானதாகும். இருநாடுகள் இடையிலான போட்டி தொடர் என்பது எல்லா நாட்டு கிரிக்கெட்டுக்கும் உயிரோட்டம் போன்றதாகும். தொடர்ந்து நடைபெறும் இரு நாடுகள் இடையிலான போட்டி தொடர் கிரிக்கெட் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவதாகும். அதற்காக உலக போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்று அர்த்தம் கிடையாது. உலக கோப்பை போட்டிகள் அனைத்தும் அருமையானது. அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. இரு நாட்டு தொடர்களும், உலக போட்டியும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும். ஒன்று, மற்றொன்றை தனிமைப்படுத்தக்கூடாது. அதிக அளவில் போட்டிகள் நடந்தால் அது வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்டு முழுவதும் வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியாது. வீரர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். மூன்று பெரிய நாடுகளுக்கு (இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து) கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் திட்டத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது. எல்லா உறுப்பினர்களும் முக்கியமானவர்கள். எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News