செய்திகள்

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-டெல்லி ஆட்டம் ‘டிரா’

Published On 2019-01-11 04:51 GMT   |   Update On 2019-01-11 04:51 GMT
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-டெல்லி அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டத்தில் தமிழக அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அத்துடன் ஆட்டம் டிராவில் முடிந்தது. #RanjiTrophy
சென்னை:

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-டெல்லி அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 432 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்து இருந்தது. ஜான்டி சித்து 104 ரன்னுடனும், லலித் யாதவ் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய டெல்லி அணி முதல் இன்னிங்சில் 133.1 ஓவர்களில் 336 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. லலித் யாதவ் 91 ரன்னில் கேட்ச் ஆனார். ஜான்டி சித்து 140 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். தமிழக சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து 96 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அத்துடன் ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் தமிழக அணிக்கு 3 புள்ளி கிடைத்தது. இதனால் தனது பிரிவில் (பி) 8-வது இடத்தை பிடித்த தமிழக அணி அடுத்த சீசனில் இதே பிரிவில் நீடிப்பதை உறுதி செய்தது. அதே சமயம் தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட டெல்லி அணி அடுத்த சீசனில் ‘சி’ பிரிவுக்கு தரம் இறக்கப்படுகிறது.

கால்இறுதி ஆட்டங்கள் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. கால்இறுதி ஆட்டங்களில் விதர்பா-உத்தரகாண்ட், சவுராஷ்டிரா-உத்தரபிரதேசம், கர்நாடகா-ராஜஸ்தான், கேரளா-குஜராத் அணிகள் மோதுகின்றன.  #RanjiTrophy

Tags:    

Similar News