செய்திகள்

சச்சின், சேவாக், லாரா ஆகியோரின் கலவைதான் பிரித்வி ஷா- ரவி சாஸ்திரி புகழாரம்

Published On 2018-10-15 09:43 GMT   |   Update On 2018-10-15 09:43 GMT
இளம் வீரரான பிரித்வி ஷா சில நேரம் சச்சினாகவும், சில நேரம் சேவாக்காகவும், சில நேரம் லாராவாகவும் தெரிகிறார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். #RaviShastri
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. ராஜகோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நேற்றுடன் முடிந்த 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இளம் வீரரான பிரித்வி ஷா டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 154 பந்தில் 19 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் குவித்து அசத்தினார்.



ஐதராபாத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 53 பந்தில் 70 ரன்களும், 2-வது இன்னிங்சில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காலும் இருந்தார். மூன்று இன்னிங்சில் 237 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

அறிமுக தொடரிலேயே ஆட்ட நாயகன் (முதல் டெஸ்ட்) மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்ற பிரித்வி ஷாவை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார்.



பிரித்வி ஷா குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘பிரித்வி ஷா கிரிக்கெட் விளையாடுவதற்காகவே பிறந்தவர். அவர் மும்பை அணிக்காக 8 வயதில் இருந்தே விளையாடி கொண்டிருக்கிறார்.



அவர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார். அவர் சில நேரம் சச்சினைப் போன்றும், சில நேரம் சேவாக் போன்று, ஆடுகளத்தில் விளையாடும்போது சில நேரத்தில் பிரையன் லாரா போன்றும் விளையாடுகிறார்.

தொழில் தர்மத்தை உணர்ந்து தலைநிமிர்ந்து நின்றால் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.’’ என்றார்.
Tags:    

Similar News