லலித் மோடி, விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவோம்: வெளியுறவுத்துறை அமைச்சகம்
- விஜய் மல்லையா, லலித் மோடி இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர்.
- இருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள் என லலித் மோடி குறிப்பிட்டிருந்தார்.
விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட லலித் மோடி, நாங்கள் இருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள் என வீடியோ வெளியிட்டிருந்தார்.
பொருளாதா குற்றச்சாட்டில் ஈடுபட்ட இருவரும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நிலையில் இந்தியாவை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்தார் லலித் மோடி. இதற்கு இணைய தளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இந்திய அரசு அவர்களை நாட்டிற்கு அழைத்து வர முடியாதது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இருவரையும் இந்தியா கொண்டு வர அரசு உறுதிப் பூண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில் "இந்தியாவில் இருந்து தப்பி ஓடியவர்கள், இந்திய சட்டத்தால் தேடப்படுபவர்கள், இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்பதில் நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம்.
குறிப்பாக இந்த இருவரையும் இந்தியா கொண்டு வர, நாங்கள் பல்வேறு அரசுகளுடன் பேசி வருகிறோம். அதற்கான செயல்முறை நடைபெற்று கொண்டிருக்கிறது. பல்வேறு வழக்குகளில், ஏராளமான வழக்கறிஞர்கள் சட்டப்பூர்வமாக ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதிலும், நாங்கள் அவர்கள் இந்தியா கொண்டு வர உறுதிப்பூண்டுள்ளோம். ஆகவே, இந்திய நீதிமன்றங்கள் முன் விசாரணையை எதிர்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.