செய்திகள்

இந்தியாவிற்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

Published On 2018-07-08 14:53 GMT   |   Update On 2018-07-08 14:53 GMT
பிரிஸ்டோலில் நடைபெற்று வரும் 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி இரவு 6.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் இடம்பெறவில்லை. இதனால் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அறிமுகமானார். குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டிற்குப் பதில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டார்.

இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே வாணவேடிக்கை நிகழ்த்தினார்கள்.

முதல் ஓவரை அறிமுக வீரர் தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் பட்லர் 3 பவுண்டரிகள் விரட்டினார். அடுத்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி விரட்டினார். உமேஷ் யாதவ் வீசிய 4-வது ஓவரில் ராய் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் துரத்தினார்.



6-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஒவரில் ராய் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விரட்டினார். ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் விட்டுக்கொடுக்க இங்கிலாந்து 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் குவித்தது.

சாஹல் வீசிய 7-வது ஓவரின் ஐந்தாவது பந்தை சிக்சருக்கு தூக்கி 23 பந்தில் அரைசதம் அடித்தார் ராய். 8-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரில் பட்லர் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சாஹர் வீசிய 10-வது ஓவரில் ராய் 31 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 9.2 ஓவரில் 103 ரன்கள் எடுத்திருந்தது.



அதன்பின் வந்த ஹேல்ஸ் (30) மோர்கன் (6), ஸ்டோக்ஸ் (14), பேர்ஸ்டோவ் (25) ஆகியோரை ஹர்திக் பாண்டியா வீழ்த்த இங்கிலாந்து ஸ்கோரில் சற்று வேகம் குறைந்தது. இருந்தாலும் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.  இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 4 ஓவரில் 38 விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். சித்தார்த் கவுல் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், சாஹர் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
Tags:    

Similar News