இந்தியா

இந்த சான்றிதழ் இல்லையா?... இனி பெட்ரோல், டீசல் கிடையாது!

Published On 2025-12-16 18:02 IST   |   Update On 2025-12-16 18:02:00 IST
  • காற்றுமாசை கட்டுப்படுத்த அரசு இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது
  • எந்த ஒரு அரசும் 9-10 மாதங்களில் காற்றுமாசை குறைப்பது என்பது சாத்தியமற்றது.

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்றுமாசை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்து வருகிறது. ஆனால், எதுவும் கைக்கொடுத்தப் பாடில்லை. இந்நிலையில் டெல்லியில் உள்ள வாகன உரிமையாளர்கள் PUC சான்றிதழ் வைத்திருக்காவிட்டால் அவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் வியாழன் (டிச.18) முதல் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லையென்றால் பெட்ரோல் நிலையங்களில் வாகன உரிமையாளர்கள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை நிரப்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டெல்லியின் சுற்றுசூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.  காற்றுமாசை கட்டுப்படுத்த அரசு இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், எந்த ஒரு அரசும் 9-10 மாதங்களில் காற்றுமாசை குறைப்பது என்பது சாத்தியமற்றது. அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆம் ஆத்மியை விட நாங்கள் சிறப்பாகத்தான் செயல்படுகிறோம். ஆம் ஆத்மியால் கொடுக்கப்பட்ட இந்த மாசுபாட்டு நோயை சரிசெய்ய நாங்கள் பாடுபட்டு வருகிறோம் என தெரிவித்தார். மேலும் பொதுமக்களும் இதற்கு உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.  

டெல்லி முழுவதும் பி.யூ.சி விதி பொருந்தும்

வியாழக்கிழமை முதல், டெல்லி முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்கள், பெட்ரோல் அல்லது டீசல் வழங்குவதற்கு முன், வாகனங்களுக்கு செல்லுபடியாகும் PUC சான்றிதழ் உள்ளதா என்பதை சரிபார்க்கும். அப்படி இல்லாதபட்சத்தில் வாகனங்களுக்கு எரிபொருள் மறுக்கப்படும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News