ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- திரைப்படக் கல்லூரி மாணவர்!
- சென்ட்ரலில் இருந்து சிவாஜிராவ் அங்கு பஸ்சில் வந்தார்.
- இருவரும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிடத்தின் முன்பு வந்து நின்றனர்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து சிவாஜிராவ் வெளியில் வந்தார். ஏற்கனவே சில தடவை சென்னைக்கு வந்திருந்த போதிலும் இந்த தடவை அவரது மனதில் வித்தியாசமான உணர்வுகள் இருந்தன. மிகப்பெரிய நடிகனாக மாற வேண்டும் என்ற ஒரே லட்சியம்தான் அவரது மனதில் நிறைந்து இருந்தது.
இதற்கு முன்பு சென்னைக்கு வந்த போது ஆங்காங்கே சுற்றி விட்டு பெங்களூர் திரும்புவதை சிவாஜிராவ் வழக்கத்தில் வைத்திருந்தார். சென்னையில் சில இடங்கள் அவருக்கு பார்த்த இடங்களாக இருந்தாலும் திரைப்படக் கல்லூரிக்கு எப்படி செல்வது என்பது தெரியவில்லை.
தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்டு இருந்த அந்த திரைப்படக் கல்லூரி 1973-ல் அண்ணா சாலை ஜெமினி பாலம் அருகே சபையர் தியேட்டர் அருகே அமைந்து இருந்தது. சென்ட்ரலில் இருந்து சிவாஜிராவ் அங்கு பஸ்சில் வந்தார். ஜெமினி பாலம் அருகே இறங்கிய அவருக்கு திரைப்படக் கல்லூரி எங்கே இருக்கிறது? என்பது தெரியவில்லை.
அந்த பகுதியில் நிறைய சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. சிவாஜிகணேசன் நடித்த "வசந்த மாளிகை" படத்தின் போஸ்டர்கள் அதிகம் காணப்பட்டன. சிவாஜிகணேசன் கையில் மது கோப்பையுடன் இருக்கும் போஸ்டரை சிவாஜி ராவ் நீண்ட நேரமாக ரசித்து பார்த்தார்.
இதே போன்று நமது படமும் போஸ்டர்களில் இடம் பெற வேண்டும் என்ற ஆசை அவருக்குள் ஏற்பட்டது. அடுத்தடுத்த படப்போஸ்டர்களையும் பார்த்த போது பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி இருந்த அரங்கேற்றம் படத்தின் போஸ்டர்களையும் பார்த்தார். அந்த போஸ்டர்களில் சிவக்குமார், பிரமிளா படங்கள் அவருக்குள் பிரமிப்பை ஏற்படுத்தின.
சுவர்களில் இருந்த போஸ்டரை பார்த்தபடியே திரைப்படக் கல்லூரிக்கு செல்ல யாரிடமாவது வழி கேட்கலாம் என்று நினைத்தார். அப்போது அவரை கடந்து ஒரு இளைஞர் வேக வேகமாக சென்று கொண்டு இருந்தார். அவரை நிறுத்தி, "திரைப்படக் கல்லூரிக்கு எப்படி செல்வது?" என்று கேட்டார்.
சிவாஜிராவ் நிறுத்திய அந்த இளைஞர் பெயர் சதீஷ். அவரும் பெங்களூரில் இருந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக வந்து இருந்தார். சிவாஜிராவை பார்த்து சிரித்துக் கொண்டே அவர், "நானும் அங்குதான் போகிறேன். என்னுடன் வாருங்கள்" என்று அழைத்துச் சென்றார்.
இருவரும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிடத்தின் முன்பு வந்து நின்றனர். அதன் ஒரு பகுதியில்தான் திரைப்படக் கல்லூரி வகுப்புகள் நடத்தப்பட்டன. அந்த இடத்தை பார்த்த பிறகுதான் சிவாஜி ராவுக்கு சில தினங்களுக்கு முன்பு நேர்முக தேர்வுக்கு வந்திருந்தது நினைவுக்கு வந்தது.
அந்த நேர்முக தேர்வுக்காக வந்த போது நடந்த நிகழ்ச்சிகளை சிவாஜி ராவ் நினைத்துப் பார்த்தார்........
திரைப்படக் கல்லூரியில் நுழைவு தேர்வு நடந்த தினத்தன்று கடுமையான கூட்டம் காணப்பட்டது. அதைப் பார்த்த போது சிவாஜி ராவுக்கு பயம் வந்து விட்டது. இவ்வளவு கூட்டத்துக்கு மத்தியில் எப்படி போராடி இடம் பிடிப்பது என்று சிவாஜி ராவ் மனதுக்குள் மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்தது.
என்றாலும் தன்னம்பிக்கையை கைவிடாமல் அடுத்து என்ன செய்யலாம்? என்று யோசித்தார். யாரிடம் விசாரித்தால் திரைப்படக் கல்லூரி பற்றி முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று அந்த பகுதியில் நோட்டமிட்டார். அப்போது திரைப்படக் கல்லூரியில் பியூனாக இருந்த வீரைய்யா என்பவர் அங்கும் இங்கும் கையில் நிறைய தாள்களுடன் சென்று வருவது தெரிந்தது.
அவரிடம் கேட்டால் நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம் என்று சிவாஜி ராவ் முடிவு செய்தார். பியூன் வீரைய்யாவை நெருங்கி, "சார்" என்றார். அதற்கு வீரைய்யா, "என்னய்யா என்ன வேண்டும்?" என்றார். சிவாஜி ராவ் மனதுக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "என்ன சார் இங்கு இவ்வளவு பேர் இருக்காங்க?" என்றார்.
உடனே பியூன் வீரைய்யா, "திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சிக்காக இன்று ஆட்களை தேர்வு செய்யப் போகிறார்கள். இந்த பயிற்சி பெறுவதற்கு 350 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அந்த விண்ணப்பத்தில் இருந்த போட்டோ மற்றும் தகவல்களை பார்த்து விட்டு 150 விண்ணப்பங்களை ஏற்கனவே கழித்து விட்டனர்.
இப்போது 200 பேர் மீதம் இருக்கிறார்கள். அவர்களில் 36 பேரை மட்டும் தேர்வு செய்வார்கள். அந்த தேர்வுதான் இன்று நடக்கப் போகிறது.
அதனால்தான் இவ்வளவு கூட்டமாக இருக்கிறது. ஒரு ஓரமாக போய் உட்கார்ந்து வேடிக்கைப் பாருங்கள்" என்று சொல்லி விட்டு அவர் ஒரு அறைக்குள் புகுந்து கொண்டார். இதை கேட்டதும் சிவாஜி ராவுக்கு மனம் திக்... திக்... என்று அடித்துக் கொண்டது. கையும் ஓடவில்லை... காலும் ஓடவில்லை... இடம் கிடைக்குமா? என்று கதிகலங்கி போனார். அப்போது ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு தேர்வு நடந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் நடிப்பு பயிற்சி கல்லூரி மாணவர்கள் தனித்தனியாக தேர்வு செய்யப்பட்டனர். கன்னட மாணவர்களை கேள்வி கேட்டு தேர்வு செய்யும் பொறுப்பு புட்டண்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அவரிடம் அழைத்துச் சென்று சிவாஜி ராவை விட்டனர்.
அவர் சிவாஜி ராவை தலை முதல் உச்சி வரை ஒரு பார்வை பார்த்தார். கறுப்பு நிறம். சற்று தொப்பை வயிறு. குச்சி போன்ற கால்கள். ஆனாலும் முகத்திலும், கண்களிலும் நடித்தே தீரவேண்டும் என்ற பிரகாசமான உணர்வு இருப்பதை புட்டண்ணா உணர்ந்தார்.
அவர் சிவாஜி ராவை பார்த்து, "ஏதாவது நடித்து காட்டுங்கள்" என்றார். உடனே சிவாஜி ராவுக்கு கர்நாடகா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முனியப்பா நடத்திய புராண நாடகத்தில் நடித்து இருந்த பாத்திரம் நினைவுக்கு வந்தது. அந்த பாத்திரத்தின் வசனங்களை அவர் புட்டண்ணா முன்பு தைரியமாக நடித்துக் காட்டினார்.
அதை பார்த்து புட்டண்ணா கைத்தட்டி பாராட்டுகளை தெரிவித்தார். இதை கண்டதும் சிவாஜி ராவுக்கு உற்சாகமாக இருந்தது. அதன் பிறகு அவரை போட்டோ எடுத்தனர். ஆனால் நேர்முக தேர்வு முடிவை உடனே சொல்லவில்லை.
வெளியில் இருங்கள் என்றனர். அதனால் சிவாஜி ராவ் படபடப்புடன் வெளியில் இருந்தார். சிறிது நேரம் கழித்தே அவருக்கு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைத்து இருப்பது தெரிந்தது. அந்த மகிழ்ச்சியோடு போனவர் இன்று திரும்பி வந்து இருப்பதை மலரும் நினைவுகளாக நினைத்துப் பார்த்தார்.
மனதுக்குள் தாயாரையும், ராகவேந்திர சுவாமிகளையும் வணங்கி ஆசி பெற்றபடி திரைப்படக் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தார். அங்கு இருந்த கரும்பலகை முன்பு நிறைய பேர் கூடி நின்று பரபரப்புடன் பெயர்களை வாசிப்பது தெரிந்தது. சிவாஜிராவ் அது என்ன? என்று விசாரித்தார்.
1973-ம் ஆண்டு திரைப்படக் கல்லூரியில் சேருவதற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் அதில் எழுதப்பட்டு இருப்பதாக சொன்னார்கள். சிவாஜி ராவுக்கு மகிழ்ச்சியும், ஆர்வமும் ஏற்பட்டது. அவரும் ஓடிச் சென்று கரும்பலகையில் இருந்த பெயர்களை வாசித்தார்.
தமிழ் வகுப்பில் படிக்க நடராஜ், சத்திய மூர்த்தி, ராஜகோபால், ஷேக் முகமது, சதீஷ், எழிலரசி ஆகியோர் தேர்வாகி இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது. மலையாளம் வகுப்பில் படிக்க ஜேம்ஸ், ரவீந்திரன், ஆதம்அயூப், இந்திராபாலன் ஆகியோர் தேர்வாகி இருந்தனர்.
தெலுங்கு வகுப்பில் படிக்க விட்டல் பிரசாத், ராமகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ண ரெட்டி, பிரதீப் சக்தி, உசைனி, நாராயணராவ், ரிஸ்வான், அனந்த ராம், முனீஷ், ரவீந்திரநாத் ரெட்டி, நந்தா கிஷோர், கோபாலகிருஷ்ணா, விஜயலட்சுமி, ஹேமா சவுத்ரி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. மற்ற மொழி வகுப்புகளை விட தெலுங்கு வகுப்பில் சேர்ந்து படிப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது.
கன்னட மொழி வகுப்பில் படிக்க அமர் முல்லா, சந்திரஹால், ரகுநந்தன், ரவீந்திரநாத், சிவாஜி ராவ், வேணுகோபால் ஆகிய 6 பேர் பெயர்கள் எழுதப்பட்டு இருந்தன. அதை சிவாஜி ராவ் பார்த்து கண்ணீர் மல்க மகிழ்ச்சி அடைந்தார். மீண்டும்... மீண்டும்... அந்த கரும்பலகையில் எழுதி இருப்பதை வாசித்து பார்த்தார். நடிப்பதற்கு விண்ணப்பித்து இருந்த 300 பேரில் தாமும் ஒருவராக தேர்வாகி இருப்பதை நினைத்த போது சிவாஜி ராவுக்கு இன்னும் தன்னம்பிக்கை அதிகரித்தது. திரையுலகில் சாதித்தே ஆக வேண்டும் என்ற வெறி உண்டானது.
தேர்வான 36 மாணவர்களையும் திரைப்படக் கல்லூரி முதல்வர் ராஜாராம் அழைத்துப் பேசினார். கல்லூரி வாழ்க்கை எப்படி இருக்கும்? எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? என்று அறிவுரை வழங்கினார். பிறகு இங்கு நாங்கள் உங்களுக்கு நடிப்பு மட்டுமே சொல்லிக் கொடுக்க மாட்டோம். உங்களிடம் இருக்கும் திறமைகளையும் வெளியே கொண்டு வரப்போகிறோம்" என்றார்.
முதல்வர் ராஜாராம் பேசியதை கேட்டதும் சிவாஜி ராவுக்கு மேலும் மகிழ்ச்சி ஏற்பட்டது. நமது திறமைகள் பட்டை தீட்டப்பட்டு விடும் என்று அவரது உள் மனது சொல்லியது. அப்போது முதல்வர் ராஜாராம் பியூன் வீரைய்யாவை அழைத்தார்.
அட்டவணைகளை அனைவருக்கும் கொடு என்றார். உடனே பியூன் வீரைய்யா தனது கையில் இருந்த அட்டவணை பேப்பர்களை 36 மாணவர்களிடமும் வழங்கினார். அதில் திரைப்படக் கல்லூரியில் காலையில் இருந்து மாலை வரை என்னென்ன வகுப்புகள் நடத்தப்படும், எத்தகைய பயிற்சிகள் கொடுக்கப்படும் என்ற விவரம் இருந்தது. காலை 10 மணி முதல் 11 மணி வரை நடிப்பு பற்றிய பாடம் எடுக்கப்படும். 11 மணி முதல் 12 மணி வரை நடனப்பயிற்சி வழங்கப்படும். 12 மணி முதல் 1 மணி வரை நடிப்பு பயிற்சி. 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை.
பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை அந்தந்த மொழிக்கான நடிப்பு வகுப்புகள். மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை தேநீர் இடைவேளை. மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி வகுப்புகள்.
இவ்வாறு அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மாணவர்கள் அதை படித்து முடித்ததும் ஒவ்வொரு பயிற்சி வகுப்பையும் மற்றும் ஒவ்வொரு மொழிக்கும் யார்-யார் பாடம் எடுப்பார்கள்? என்ற விவரத்தை கல்லூரி முதல்வர் ராஜாராம் வெளியிட்டார்.
அதன்படி நடிப்பு பற்றி பாடத்தை கல்லூரி முதல்வர் ராஜாராம் எடுப்பார் என்றும், நடிப்பு பயிற்சியை சிவனந்தன் வழங்குவார் என்றும், உடற்பயிற்சி மற்றும் யோகா வகுப்புகளை பிரபாகர் மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதுபோல ஒவ்வொரு மொழிக்கும் ஒரு ஆசிரியர் அறிவிக்கப்பட்டார். கன்னட மொழியில் நடிப்பு பயிற்சிக்கு உஷா அறிவிக்கப்பட்டார். இதை கேட்டதும் சிவாஜிராவ் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். மாணவர்கள் அனைவரிடமும் நாளை முதல் வகுப்புகள் தொடங்கும் சென்று வாருங்கள் என்று முதல்வர் ராஜாராம் கூறினார். சிவாஜி ராவுக்கு எங்கே போவது? என்று தெரியவில்லை.
அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பார்க்கலாம்.