2025 - ஒரு பார்வை

2025 REWIND: டங்ஸ்டன் சுரங்க திட்டமும் அரிட்டாபட்டி மக்களின் போராட்டமும்

Published On 2025-12-09 11:00 IST   |   Update On 2025-12-09 11:00:00 IST
  • டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து மேலூர் தாலுகாவில் இருந்து மதுரை மாநகர் வரை பிரமாண்ட பேரணி நடந்தது.

மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட முக்கிய கனிம தொகுதிகளில் ஏலம் விடுவது குறித்து தமிழ்நாடு அரசுக்கு 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி கடிதம் எழுதியதாக மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்தது. இதற்கு 2023-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்ததாக தெரிவித்துள்ள மத்திய அரசு, அதில் முக்கியமான கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுகளிடமும் இருக்க வேண்டும் அவர் கோரியதாக குறிப்பிட்டது.

2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி மதுரை நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட ஏலத்திற்கு விடப்பட உள்ள 3 முக்கியமான கனிமத் தொகுதிகளின் விவரங்களை வழங்க கோரி தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. 2024 பிப்ரவரி 8-ந்தேதி அந்த விவரங்களை தமிழ்நாடு புவியியல், சுரங்கத் துறை ஆணையர் வழங்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த கனிமத் தொகுதி, 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கூட்டு உரிமமாக ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது.

நவம்பர் 7-ந்தேதி, அரிட்டாபட்டியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி டங்ஸ்டன் எடுக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

டங்ஸ்டன் சுரங்க திட்டம் கொண்டுவரப்பட்டால் அந்த பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் அழியும் என்றும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறி அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.

 

அரிட்டாபட்டி பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் வன விலங்குகள் பாதிக்கப்படும். இயற்கை சூழல் கெடுவதோடு விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். எனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நவம்பர் 29-ந்தேதி இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், பிரதமர் உடனே தலையிட்டு மத்திய அரசு வழங்கி உள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

டிசம்பர் 9-ந்தேதி டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர், எக்காரணம் கொண்டும், தமிழ்நாட்டிற்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மாநில அரசு அனுமதிக்காது. நான் முதல்வராக உள்ளவரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன். டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் ராஜினாமா செய்யவும் தயார். டங்ஸ்டன் சுரங்கம் அமையும் சூழல் ஏற்பட்டால் நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று கூறினார்.

 

ஜனவரி 7-ந்தேதி டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து மேலூர் தாலுகாவில் இருந்து மதுரை மாநகர் வரை பிரமாண்ட பேரணி நடந்தது.

இதற்கிடையே, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி விவசாயிகள் குழுவினர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக விவசாயிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது மத்திய இணைய அமைச்சர் எல். முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

இதையடுத்து டங்ஸ்டன் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாபட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் சாலைகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மக்கள் ஆனந்தமாக கொண்டாடினர். இது அரிட்டாபட்டி மக்களுக்கு மறக்க முடியாத வெற்றியாகும்.

இதுகுறித்து கூறிய அரிட்டாபட்டி மக்கள், "எங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மத்திய அரசு திட்டத்தை கைவிட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ வழி செய்திருக்கிறார்கள். அரிட்டாபட்டி மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த மற்ற கிராம மக்களுக்கும் நன்றி. டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்றும் தெரிவித்தனர்.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அரிட்டாபட்டி மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடத்தினர். முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்று, "இந்த விழா உங்களுக்கானது, மக்களுக்கான வெற்றி" என்று கூறி, மக்களுக்கு நன்றி தெரிவித்து, திட்டம் ரத்து செய்யப்பட்டது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார், இது மக்களை மகிழ்வித்தது.

 

அரிட்டாபட்டிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வல்லாளப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று பேசுகையில்,

மக்களின் அன்பு கட்டளையை ஏற்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இந்த பாராட்டு விழா உங்களுக்கானது. டங்ஸ்டன் திட்டம் ரத்து நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. போராட்டத்தை முன்னெடுத்த மக்களுக்கு தான் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். மக்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவாக தான் நான் பார்க்கிறேன். எனக்கு எதற்கு பாராட்டு விழா ? அது எனது கடமை. பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை. மக்களை பற்றி தான் எனக்கு கவலை. டங்ஸ்டன் தீர்மானத்தை ஆதரித்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி. என்றுமே உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.

Tags:    

Similar News