null
2025 REWIND: கள்ளக்காதல்... ஆயுள் தண்டனை... கதறி அழுத குன்றத்தூர் அபிராமி...
- டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு, பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
- கணவருடன் வாழ விருப்பமில்லையானால், பிரிந்து சென்றிருக்கலாமே? குழந்தைகளை கொலை செய்ததை ஏற்க முடியாது.
நாடு முழுவதுமே கள்ளக்காதல் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் நூற்றுக்கணக்கான கள்ளக்காதல் விவகாரங்கள் வெளிவருகிறது. ஒருவர் கள்ள உறவில் ஈடுபடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கள்ளக்காதலை ஒரு உறவிலிருந்து வெளியேறும் உத்தியாக பயன்படுத்தலாம். இல்லையெனில் தனது துணைக்கு தெரியப்படுத்தி அவர்களை பிரிய விரும்பலாம். ஆனால் கள்ளக்காதல் என்றவுடன் தமிழக மக்களுக்கு நினைவுக்கு வருபவர் குன்றத்தூர் அபிராமிதான்.
கடந்த 2018-ம் ஆண்டு இந்த அபிராமி செய்த கொடூரமான காரியம் இன்னும் நம் மக்களின் மனதில் இருந்து நீங்கி இருக்காது. அபிராமிக்கு இந்த வருடம்தான் நீதிமன்றம் தண்டனை அளித்தது. இந்த வருடம் நீதிமன்றங்கள் எத்தனையோ வழக்குகளுக்கு தீர்ப்பை தந்திருந்தாலும், அபிராமிக்கு தந்த தண்டனையை யாராலும் மறக்க முடியாது.
குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் (6) என்ற மகனும் கார்னிகா (4) என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.
டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவரான விஜய்க்கு தெரியவர அவர் கண்டித்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அபிராமி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து இதற்கு தடையாக உள்ள கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தார். அவர்களை கொலை செய்து விடலாம் என்று சுந்தரம்தான் ஐடியா கொடுத்துள்ளார்.
இதையடுத்து, அபிராமி தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக விஜய் உயிர் தப்பினார். இருப்பினும் 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கணவர் விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அபிராமியை தேடினர். அப்போது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சிறையில் அடைக்கப்பட்ட 7 வருடங்களுக்கு பிறகு அபிராமி வழக்கில் கடந்த ஜூலை 24-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி தீர்ப்பில், உங்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை தர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஆனால், இது காந்தி தேசம் என்பதால், பழிக்கு பழியாக தண்டனையை வழங்க முடியாது. ஆனால், நீங்கள் இருவரும் செய்திருக்கக் கூடிய குற்றம் கொடூரமானது. கணவருடன் வாழ விருப்பமில்லையானால், பிரிந்து சென்றிருக்கலாமே? குழந்தைகளை கொலை செய்ததை ஏற்க முடியாது. அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கிறேன். மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கிறேன் என்று உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை கேட்டு அபிராமி கதறி அழுதார். தன்னுடைய அப்பா, அம்மா வயதானவர்கள். ஏற்கனவே 7 வருடம் சிறையில் இருந்து விட்டேன். எனவே, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டும் அதை நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை.
குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு தூக்கு தண்டனையே தர வேண்டும் என்று பெரும்பாலானோர் கருத்து கூறினார்கள்.
கள்ளக்காதல் கண்ணை மறைக்க, அதற்கு தடையாக இருக்கும் குழந்தைகளை கொல்ல நினைப்பவர்களுக்கு இதுபோன்ற கடுமையான தண்டனை ஒரு பாடமாகவும், எச்சரிக்கையாகவுமே இருக்கும்.
நீதிமன்றம் அளித்த தண்டனை வேண்டுமானால் தாமதம் ஆகியிருக்கலாம்... ஆயுள் தண்டனையின்போது செய்த தவறை நினைத்தும், குழந்தைகளை நினைத்தும் அபிராமி அனுபவிக்கும் வேதனை அவருக்கு காலம் கொடுத்த பரிசு.
இறைவன் கொடுத்த அழகான வாழ்க்கை, குழந்தை என வாழ தெரியாமல் நடுவில் வந்த கள்ளக்காதலால் தன்னுடைய வாழ்க்கையையே தொலைத்துவிட்டார் குன்றத்தூர் அபிராமி.