2025 REWIND: வளர்ப்பு பிராணிகள்... சென்னை மாநகராட்சி விதித்த அதிரடி கட்டுப்பாடுகள்
- செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- பிட்புல், ராட்வீலர் நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.
சென்னையில் நாய்க்கடி சம்பவங்களைத் தொடர்ந்து, வளர்ப்பு நாய்களுக்கும், விலங்குகளுக்கும் உரிமம் பெறுவதைக் கட்டாயமாக்கி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்திடும் வகையில் அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சையினையும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும், செல்லப் பிராணிகளுக்கான உரிமம் வழங்குதல் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட விவரங்களை தொடர்ந்து கண்காணித்தல் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதள சேவையினை மேயர் ஆர்.பிரியா அக்.3-ந்தேதி தொடங்கி வைத்தார்.
செல்லப் பிராணிகளின் உரிமையாளர் தங்களின் புகைப்படம், முகவரிச் சான்று, செல்லப்பிராணி புகைப்படம் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து ரூ.50 உரிமக் கட்டணமாகச் செலுத்தி உரிமம் பெறலாம்.
செல்லப்பிராணிக்களுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், இதன்மூலம் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை (www.chennaicorporation.gov.in-ல் Pet Animal Licence) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்தது.
செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும், பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் பொழுது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும். இதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் பெற தவறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி ஊழியர்கள் இதை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள். மேலும் பூங்காக்கள் நடைபாதைகள் பிற பகுதிகளில் கழுத்துப் பட்டை இல்லாமல் நாய்களை அழைத்து வந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பிட்புல், ராட்வீலர் இன நாய்களுக்கு புதிதாக உரிமம் வழங்குவதை நிறுத்தவும், ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள் செல்லப்பிராணியை வெளியே அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயம். இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும், மேற்கண்ட 2 நாய்களின் ஆண்டு உரிமத்தை புதுப்பிக்க தடை விதிக்கப்படுகிறது. உரிமம் இல்லாமல் பிட்புல், ராட்வீலர் நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளுக்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு விதித்ததையடுத்து அதன் உரிமையாளர்கள் ஆர்வத்துடன் தங்களது செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்று வருகின்றனர்.
இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உரிமம் பெற பதிவு செய்துள்ளனர். இதில், 57 ஆயிரம் பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.