காதலியை சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த வாலிபர்
- பெண்ணின் தந்தை திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டார்.
- அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்திவாசன் (வயது30). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். நாளடைவில் கீர்த்திவாசனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இதற்கிடையே அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கீர்த்திவாசன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்த கீர்த்திவாசன் அப்பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அப்பெண் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அந்த பெண்ணின் தந்தை திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டார்.
இதையடுத்து கீர்த்திவாசனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காதலியை தன்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மிரட்டினார்.
இதனிடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே கீர்த்திவாசன் தான் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கீர்த்திவாசன் கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.