புதுச்சேரி

விஜய் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விளக்கம்

Published On 2025-11-30 18:52 IST   |   Update On 2025-11-30 18:52:00 IST
  • புதுச்சேரி அரசும் ரோடு ஷோ தொடர்பான ஐகோர்ட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறது.
  • த.வெ.க. அளித்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

புதுச்சேரியில் வருகிற 5-ந் தேதி ரோடு ஷோ நடத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். புதுச்சேரி காலாப்பட்டில் தொடங்கி, கன்னியக்கோவில் வரையிலும் சுமார் 30 கி.மீ. வரை ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே மைக்கில் பேசவும் அனுமதி கேட்டு 4 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி த.வெ.க. நிர்வாகிகள் டி.ஜி.பி.யிடம் மனு அளித்தனர்.

தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கும்படி கோரினர். ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

சென்னை ஐகோர்ட்டு ரோடு ஷோ நடத்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சிகளின் பரிந்துரைகளை வழங்கும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதன்படி தமிழக அரசின் வழிகாட்டுதல்கள், அரசியல் கட்சிகளின் பரிந்துரைகள் ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு, இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டு கட்டுப்பாட்டின் கீழ் புதுச்சேரி மாநிலம் இடம் பெற்றுள்ளது. இதனால் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுகள் அனைத்தும் புதுச்சேசரிக்கும் பொருந்தும். இதனால் புதுச்சேரி அரசும் ரோடு ஷோ தொடர்பான ஐகோர்ட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறது. இதனால் த.வெ.க. தலைவர் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்துவது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து த.வெ.க. சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனு குறித்து விசாரிக்க புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் டி.ஜி.பி. ஷாலினி சிங்கை சந்திக்க வந்தார்.

ஆனால் டி.ஜி.பி. அலுவலகத்தில் இல்லை. அவர் டெல்லி சென்றிருப்பதாக கூறப்பட்டது. அவர் நாளை புதுச்சேரி திரும்புவதால் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மீண்டும் நாளை (திங்கட்கிழமை) புதுச்சேரி டி.ஜி.பி.யை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.

ஆனால் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது த.வெ.க. அளித்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என விளக்கமளித்தனர்.

இந்தநிலையில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கப்படுமா? என்று முதலமைச்சர் ரங்கசாமியிடம் கேட்டபோது புதுச்சேரி தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News