புதுச்சேரி

முதலமைச்சர் காரை முற்றுகையிட்ட வியாபாரிகள்

Published On 2025-05-20 10:40 IST   |   Update On 2025-05-20 10:40:00 IST
  • நகராட்சி ஊழியர்கள் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி வருகின்றனர்.
  • முதலமைச்சர் ரங்கசாமி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக கைவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் விபத்துகளும் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து பொதுப்பணித்துறை, நகராட்சி ஊழியர்கள் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் தலைமை தபால் நிலையம் முன்பு இருந்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த இளநீர் கடை, துணிக்கடையை அகற்ற முயற்சி செய்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் இருந்து காரில் புறப்பட்டு அந்த வழியாக சென்றார். ரங்கபிள்ளை வீதி சந்திப்பில் வந்த போது வியாபாரிகள் முதலமைச்சர் ரங்கசாமியின் காரை முற்றுகையிட்டனர்.

அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி வியாபாரிகளை அழைத்து பேசினார்.

அப்போது அவர்கள் தாங்கள் பல ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்து வருவதாக கூறினர். தொடர்ந்து வியாபாரம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக கைவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News