புதுச்சேரி

                                            கொலை செய்யப்பட்ட உமா. போலீசில் சரணடைந்த கணவர்


நடத்தையில் சந்தேகம்- அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்ற கணவன்

Published On 2025-02-15 14:24 IST   |   Update On 2025-02-15 14:24:00 IST
  • இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
  • கொலை நடந்த இடத்தில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

மதகடிப்பட்டு:

புதுச்சேரி அருகே தமிழக பகுதியான கண்டமங்கலம் வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது45) இவரது மனைவி உமா (42) இவர்களுக்கு மனோ (23) என்ற மகனும், வினோதினி (21) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

மணிகண்டனும் உமாவும் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இதற்கிடையே உமாவுக்கு சிலருடன் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மணிகண்டன் மனைவியை கண்டித்து வந்தார். ஆனாலும் உமா அவர்களுடன் பழகுவதை கைவிடவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை செங்கல் சூளையில் வேலை முடிந்து கணவன்-மனைவி இருவரும் வீடு திரும்பினர். பின்னர் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். மனோவும் வினோதினியும் ஒரு அறையில் தூங்கினர்.

மணிகண்டனும் அவரது மனைவி உமாவும் வீட்டு வராண்டாவில் தூங்கினர். அப்போது மணிகண்டன் மனைவியிடம் நமக்கு கல்லூரியில் படிக்கும் மகன்-மகள் உள்ளனர் மற்ற ஆண்களுடன் பழகுவது தெரிந்தால் அவர்களுக்கு அவமானமாகிவிடும் எனவே கைவிடுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து உமா தனியாக படுத்து தூங்கினார்.

மனைவி தனது சொல்லை கேட்காததால் ஆத்திரம் தீராத மணிகண்டன் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த உமாவின் தலையில் அம்மிக்கல்லை ஓங்கி போட்டார். இதில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உமா இறந்தார்.

இதையடுத்து மணிகண்டன் கண்டமங்கலம் போலீஸ் நிலையம் சென்று அங்கு நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் உமாவின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்தில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News