புதுச்சேரி

அமைச்சர் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டதால் பா.ஜ.க. அமைச்சர் அதிருப்தியில் டெல்லியில் முகாம்

Published On 2024-11-26 11:16 IST   |   Update On 2024-11-26 11:16:00 IST
  • லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லசுடன் பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நெருக்கமாகியுள்ளனர்.
  • சாய் ஜெ.சரவணன்குமார் கவனித்து வந்த குடிமை பொருள் வழங்கல்துறை திருமுருகனுக்கு வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசு நடக்கிறது.

அமைச்சரவையில் பா.ஜ.க. சார்பில் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். அமைச்சர் பதவி கிடைக்காத பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் வாரிய தலைவர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். டெல்லி சென்றும் புகார் தெரிவித்தனர்.

தற்போது லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லசுடன் பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நெருக்கமாகியுள்ளனர். இந்நிலையில் பா.ஜ.க. அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமாரும் அதிருப்தியில் உள்ளார். தனக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்படவில்லை என்றும், அமைச்சரவை பட்டியலில் கடைசி இடம் ஒதுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

என்.ஆர்.காங்கிரஸ் பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா நீக்கப்பட்டதை தொடர்ந்து காரைக்காலைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின் அமைச்சர்களின் துறைகளை முதலமைச்சர் ரங்கசாமி மாற்றம் செய்தார்.

அதில் சாய் ஜெ.சரவணன்குமார் கவனித்து வந்த குடிமை பொருள் வழங்கல்துறை திருமுருகனுக்கு வழங்கப்பட்டது. சாய் ஜெ.சரவணன்குமார் வசம் இருந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நகர அடிப்படை சேவை துறைகள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு மாற்றப்பட்டது. தற்போது அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமாரிடம் ஆதிதிராவிடர் நலத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் ஆகிய 3 துறைகள் மட்டுமே உள்ளது.

இதனால் சாய் ஜெ.சரவணக்குமார் அதிருப்தியில் உள்ளார்.

தனக்கு கூடுதல் துறைகளை பெற பல்வேறு வகையிலும் முயற்சித்து வருகிறார். தனது துறை மாற்றம் குறித்து கவர்னர், முதலமைச்சரிடம் கேட்டுள்ளார். அமைச்சரவையில் தன்னை கடைசி இடத்துக்கு தள்ளி விட்டதாகவும் முறையிட்டார். தனது ஆதங்கத்தை கட்சி மேலிடத்திடம் தெரிவிக்க அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார் டெல்லி சென்றுள்ளார்.

அங்கு மேலிட தலைவர்களை சந்தித்து பேச தொடர்ந்து அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

Tags:    

Similar News