புதுச்சேரி

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

Published On 2025-04-23 13:30 IST   |   Update On 2025-04-23 13:30:00 IST
  • போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் ஆளுநர் மாளிகையில் சோதனை நடத்தினர்.
  • ஆளுநர் மாளிகை தற்காலிகமாக இடம் பெயருகிறது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது.

ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் வீடு, பிரெஞ்சு தூதரகம், கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

தொடர்ந்து கடந்த வாரத்தில் நட்சத்திர விடுதிகள், ரெஸ்டாரண்ட்டுகள் ஆகியவற்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்தது.

போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும் மிரட்டல் தொடர் கதையாகி உள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் நபரை போலீசார் கண்டறிய முடியவில்லை. புதுவை சைபர் கிரைம் போலீசாரால் துப்புதுலக்க முடியவில்லை. இதனையடுத்து மத்திய சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு இமெயிலில் ஒரு தகவல் வந்தது. அதில், ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என தகவல் இருந்தது.

இதுகுறித்து பெரியக்கடை போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் ஆளுநர் மாளிகையில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் ஆகியவற்றுடன் சோதனை நடந்தது. இறுதியில் வெடிகுண்டு புரளி என்பது தெரிய வந்தது.

இதனிடையே ஆளுநர் மாளிகை தற்காலிகமாக இடம் பெயருகிறது. இதற்கான கணபதி ஹோமம் இன்று அதிகாலை கடற்கரை சாலையில் உள்ள கலாச்சார மையத்தில் நடந்தது.

இதனால் ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தற்காலிக ஆளுநர் மாளிகையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News