புதுச்சேரி

கனகன் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிப்பதை காணலாம்.

வரலாறு காணாத மழையால் 4 ஆண்டுகளுக்குப் பிறகு 84 ஏரிகளும் நிரம்பின

Published On 2024-12-05 09:12 IST   |   Update On 2024-12-05 09:12:00 IST
  • மழையானது புதுவையில் உள்ள நீர்நிலைகள் நிரம்புவதற்கு பெருமளவில் கைகொடுத்தது.
  • நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை இருக்காது.

புதுச்சேரி:

புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கி தொடர்ச்சியாக பெய்து வருகிறது. தொடக்கத்தில் மழை சற்று குறைவாக பெய்த நிலையில் ஃபெஞ்சல் புயல் அதிக மழையை தந்தது.

புயல் கரையை கடந்தபோது புதுவையில் இதுவரை இல்லாத அளவாக 54 செ.மீ. மழை பதிவானது. இதனிடையே சாத்தனூர், வீடூர் அணைகளும் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் புதுச்சேரி முழுவதும் வெள்ளக்காடானது.

இந்த மழையானது புதுவையில் உள்ள நீர்நிலைகள் நிரம்புவதற்கு பெருமளவில் கைகொடுத்தது. புதுவையின் மிகப்பெரிய ஏரிகளான ஊசுடு, பாகூர், கிருமாம்பாக்கம் ஏரிகள் உள்பட 84 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் அனைத்தும் தற்போது நிரம்பி வழிகின்றன.

இதேபோல் புதுவையில் ஆறுகளின் குறுக்கே 27 படுகை அணைகள் உள்ளன. அதில் செல்லிப்பட்டு படுகை அணை ஏற்கனவே உடைந்துவிட்டது. தற்போது படுகை அணைகள் உள்ளன. இந்த அணைகளும் நிரம்பி வழிகின்றன.

கடந்த காலங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சராசரியாக 68 செ.மீ. மழை பொழியும். ஆனால் இந்த ஆண்டு 76.50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதாவது இதுவரை 11 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது.

நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை இருக்காது. மேலும் விவசாய தேவைகளுக்கும் போதுமான நிலத்தடி நீர் கிடைக்கும்.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

புதுச்சேரி பகுதியில் உள்ள 84 ஏரிகளும் நிரம்பிவிட்டன. கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 4 ஆண்டுகளுக்குப் பின் அனைத்து ஏரிகளும் தற்போது முழுமையாக நிரம்பி உள்ளது.

கடந்த காலங்களில் பாகூர் ஏரி நிரம்பினால், ஊசுடு ஏரி நிரம்பாமல் இருக்கும். கடந்த ஆண்டு ஏரிகள் 70 சதவீதம்தான் நிரம்பின. ஆனால் இந்த ஆண்டு இரு பெரிய ஏரிகளும் நிரம்பிவிட்டன.

இந்த ஏரிகளில் தற்போது 1.73 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரிகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர் உயர்ந்து கடல் நீர் உட்புகாமல் இருக்கும். மேற்கில் இருந்து வரும் தண்ணீர் உழந்தை ஏரி, வேல்ராம்பட்டு ஏரி வழியாக திருப்பப்பட்டதால் இந்திராகாந்தி சதுக்கத்தில் ஓரளவுக்கு சேதம் தடுக்கப்பட்டது.

அதேபோல் பூமியான்பேட்டை பகுதியில் பாலம் பெரியதாக அமைக்கப்பட்டதால் தண்ணீரை எளிதாக உள்வாங்கியது. இதனால் பூமியான்பேட்டை, ஜவகர் நகர் பகுதியில் தேங்கிய தண்ணீர் விரைவாக வடிந்தது. பொதுப்பணித்துறை மூலம் 44 பம்புகள் வைத்து தண்ணீர் இறைக்கப்பட்டது.

வெள்ளத்தால் ஏற்படும் உடைப்புகளை தடுக்க 15 ஆயிரம் மண் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இன்னும் 25 ஆயிரம் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன.

நகரப் பகுதியில் தண்ணீர் செல்லும் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டு கழிவுகளான மெத்தை, தலையணை போன்றவற்றை போட்டு வைத்துள்ளனர். இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அதை ஊழியர்கள் உடனடியாக சரி செய்தனர்.

சாத்தனூர், வீடூர் அணைகள் திறக்கப்பட்டு சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் தண்ணீர் வடிவதில் பிரச்சினை ஏற்பட்டது. அந்த வெள்ளமும் ஊருக்குள் புகுந்ததால் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News