இந்தியா

செல்பி எடுத்தபோது நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

Published On 2023-02-07 09:07 IST   |   Update On 2023-02-07 09:07:00 IST
  • அருவியின் மேல் பகுதிக்கு சென்ற சந்தீப், அங்கிருந்தபடி இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தார்.
  • அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால், சந்தீப்பின் உடல் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது.

திருவனந்தபுரம்:

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்தீப் (வயது 21), கல்லூரி மாணவர். இவர் தனது நண்பர்களுடன், கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். இவர்கள் மூணாறில் சுற்றிப்பார்த்து விட்டு இடுக்கி சென்றனர். அங்குள்ள சுனையம்மக்கல் நீர்வீழ்ச்சிக்கு சென்று அதன் அழகை ரசித்தனர்.

பின்னர் அருவியில் குளித்த அவர்கள் அங்கிருந்து அருவியின் மேல் பகுதிக்கு சென்றனர். அருவியின் மேல் பகுதிக்கு சென்ற சந்தீப், அங்கிருந்தபடி இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தார். அருவியின் அருகே சென்று, அங்கிருந்தபடியே செல்பி எடுக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக பாறையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. அப்போது அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால், சந்தீப்பின் உடல் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது.

இதற்கிடையே அருவியின் மேல்பகுதியில் இருந்து வாலிபர் ஒருவர் கீழே விழுந்ததை பார்த்தவர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு மீட்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சந்தீப்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சந்தீப் பிணமாக மீட்கப்பட்டார்.

Tags:    

Similar News