வரதட்சணை புகார்... மாமனார் வீட்டின் முன்பு கைவிலங்குடன் டீ விற்று மருமகன் நூதன போராட்டம்
- கிருஷ்ண குமார் அவரது மாமனார் வீட்டருகே 498A என்ற பெயரில் டீக்கடை ஒன்றை திறந்துள்ளார்.
- இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கைவிலங்கு அணிந்துகொண்டே அவர் தேநீர் விற்பனை செய்கிறார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் தன் மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுத்த மனைவிக்கு எதிராக, தனது மாமனார் வீட்டருகே டீக்கடை ஒன்றை திறந்து கணவர் ஒருவர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கிருஷ்ண குமார் என்ற நபர் 2018 இல் மீனாட்சி என்பவரை திருமணம் செய்தார். இருவரும் சேர்ந்து தேனீ வளர்ப்புத் தொழிலைத் தொடங்கி நடத்தி வந்தனர்.
ஆனால் 2022 ஆம் ஆண்டில், கிருஷ்ணாவை விட்டு பிரிந்து சென்ற அவரது மனைவி, கணவர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தார்.
இந்நிலையில், கிருஷ்ண குமார் அவரது மாமனார் வீட்டருகே 498A என்ற பெயரில் டீக்கடை ஒன்றை திறந்து வியாபாரம் தொடங்கியுள்ளார்.
இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கைவிலங்கு அணிந்துகொண்டே அவர் தேநீர் விற்பனை செய்கிறார். ஐபிசி 498A கீழ் இவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதால், அந்தப் பெயரையே கடைக்கு வைத்து போராட்டம் நடத்தி வருவதாக கிருஷ்ண குமார் தெரிவித்தார்.
டீக்கடையில் "எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்" என்ற வாசகங்கள் உள்ள பதாகைகள் மற்றும் போஸ்டர்களை அவர் வைத்துள்ளார். இணையத்தில் கிருஷ்ண குமாரின் டீக்கடை வைரலாகியுள்ளது.
இந்த புகார் தொடர்பாக பேசிய அவர், "என் மனைவி கொடுத்த பொய் வழக்கால் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது. கடந்த மூன்று வருடங்களாக, நீதிக்காக நீதிமன்றத்தில் நான் அலைந்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு வயதான தாய் இருக்கிறார். அவருக்காக தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
ஆனால அதே சமயம் இது தொடர்பாக பேசிய அவரது மனைவி, " நிலம் வாங்க என் தந்தையிடம் என் கணவர் பணம் கேட்டார். அவர் பணம் தர மறுத்தபோது, அவர் என்னை அடித்தார். பின்னர் நான் என் தந்தையின் வீட்டிற்கு வந்துவிட்டேன். நான் விவாகரத்துக்கு தயாராக இருக்கிறேன், ஆனால் அதற்கு முதலில், என் பெயரில் அவர் வாங்கிய அனைத்து கடன்களையும் திருப்பி கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.