இந்தியா

குடியிருப்பை காலி செய்யாதது ஏன்?.. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம்

Published On 2025-07-07 23:44 IST   |   Update On 2025-07-07 23:44:00 IST
  • அவர்களுக்கு நெமலின் மயோபதி என்ற ஒரு குறைபாடு உள்ளது.
  • இது எலும்பு தசைகளைப் பாதிக்கும் மிகவும் அரிதான மரபணு கோளாறு.

உச்சநீதிமன்றத்தின் தலைமைநீதிபதியாக இருந்த டி.ஒய். சந்திரசூட் தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து அவர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது, "நாங்கள் எங்கள் சாமான்களை பேக் செய்துவிட்டோம். அதில் சில ஏற்கனவே புதிய வீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளன. சில இங்கே ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டுள்ளன" என்று சந்திரசூட் கூறினார்.

குடியிருப்பில் நீண்ட காலம் தங்கியதற்கான காரணங்களையும் அவர் விளக்கினார். சக்கர நாற்காலிக்கு ஏற்ற வீடு தேவைப்படும் தனது மகள்களின் உடல்நிலையையும் அவர் குறிப்பிட்டார்.

அதாவது, "நான் குறிப்பிட விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், நாங்கள் இரண்டு குழந்தைகளின் பெற்றோர். பிரியங்கா மற்றும் மஹி. அவர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகள். அவர்களுக்கு சிறப்புத் தேவைகள் உள்ளன. அவர்களுக்கு நெமலின் மயோபதி என்ற ஒரு குறைபாடு உள்ளது. இது எலும்பு தசைகளைப் பாதிக்கும் மிகவும் அரிதான மரபணு கோளாறு.

எனவே வீட்டில் கூட, நாங்கள் அதிக சுகாதாரத்தைப் பராமரிக்கிறோம். அவர்களைக் கவனித்துக் கொள்ள எங்களிடம் மிகவும் திறமையான செவிலியர் உள்ளனர். வீட்டு வேலைகளைத் தொடரத் தயாராக இருப்பதாக அவர்கள் என்னிடம் சொன்னவுடன், நாங்கள் இடம் பெயர்வோம். இந்தக் காரணங்களுக்காக, இன்னும் இரண்டு நாட்கள் ஆகும். அதிகபட்சம் இரண்டு வாரங்கள் இருக்கலாம்" என்று தெரிவித்தார்.

ஜனவரி 2021 மற்றும் 2022 இல், தனது மூத்த மகள் பிரியங்கா சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் 44 நாட்கள் ஐசியுவில் சிகிச்சை பெற்றதையும்  சந்திரசூட் நினைவு கூர்ந்தார். பிரியங்கா மற்றும் மஹி சந்திரசூட் உடைய வளர்ப்பு மகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News