இந்தியா

வாக்காளர் பட்டியலில் பெருமளவில் மக்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம்.. உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

Published On 2025-07-30 02:45 IST   |   Update On 2025-07-30 02:45:00 IST
  • அதிகளவில் மக்கள் நீக்கப்படுவதால் அவர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள் என வாதிட்டனர்.
  • சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள்

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

நேற்று நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் இதுகுறித்த விசாரணை நடைபெற்றது.  

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்படவுள்ள வரைவுப் பட்டியலில் இருந்து அதிகளவில் மக்கள் நீக்கப்படுவதால் அவர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள் என வாதிட்டனர்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிறப்பு தீவிர திருத்தச் செயல்முறையின் போது 65 லட்சம் பேர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும், அவர்கள் இறந்துவிட்டவர்கள் அல்லது நிரந்தரமாக வேறு இடங்களுக்கு மாறிவிட்டவர்கள் என்றும் பூஷன் தெரிவித்தார்.

நீதிபதி சூர்ய காந்த், "இந்திய தேர்தல் ஆணையம் ஒரு அரசியலமைப்பு அமைப்பு என்பதால், அது சட்டத்திற்கு இணங்க செயல்படும் என்று கருதப்படுகிறது. ஏதேனும் தவறு நடந்தால், அதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நாங்கள் விசாரிப்போம்," என்று கூறினார்.

நீதிபதி பக்ஷி பூஷனிடம், "சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள் என்று உங்கள் அச்சம் உள்ளது. இப்போது இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை நாடுகிறது.

நாங்கள் ஒரு நீதித்துறை அதிகாரமாக இந்த செயல்முறையை மேற்பார்வையிடுகிறோம். பெருமளவில் மக்கள் விலக்கு இருந்தால், நாங்கள் உடனடியாக தலையிடுவோம். இறந்துவிட்டதாக அவர்கள் கூறும் 15 பேர் உயிருடன் இருப்பதற்கு நீங்கள் ஆதாரம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்.

ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் இது குறித்த இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News