ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டை கொடுக்க முடியாது - UIDAI அறிவிப்பு
- ஆதார் அட்டையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய, ‘யுதய்’ அனுமதித்த ஆவணப்பட்டியலில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வந்தது.
- பான்கார்டு என்பது முக்கியமாக வரிவிதிப்பு தொடர்பான ஆவணம், அடையாளம் அல்லது முகவரி நிரூபிக்கும் ஆவணம் அல்ல.
ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 'யுதய்' என்று அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை பெயர் மாற்றத்துக்கான ஆதார ஆவணமாக ஏற்கப்பட்டு வந்த பான்கார்டு தற்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் இதற்கு முன்பாக 5 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பட்டியல் ஒன்றும், 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பட்டியல் என 2 வகையான ஆவணப்பட்டியல் மட்டுமே இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் 4 வகையான புதிய ஆவணப்பட்டியலை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டு உள்ளது.
இதில் 5 வயதிற்கு உட்பட்டவர்கள், 5 வயதுக்கு மேல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 4 வகையான ஆவணப்பட்டியல் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதில் குறிப்பாக ஆதார் அட்டையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய, 'யுதய்' அனுமதித்த ஆவணப்பட்டியலில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வந்தது.
அதாவது பெயர் திருத்தம் போன்ற மாற்றங்களுக்கு பான் கார்டு சமர்ப்பித்தாலும் அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு வந்தது. பான் கார்டில் பெயர், தந்தை பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதால், அது ஒரு அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்பட்டது.
ஆனால் நேற்று முன்தினம் 'யுதய்' புதிதாக வெளியிட்டுள்ள ஆவணப்பட்டியலில் பான் கார்டு நீக்கப்பட்டுள்ளது. அதாவது இனி ஆதார் பெயர் மாற்றத்திற்காக பான் கார்டை சமர்ப்பிக்க முடியாது. பான் கார்டில் முகவரி குறிப்பிடப்படவில்லை. பெயர் தவிர மற்ற அடையாள உறுதிப்படுத்தும் விவரங்கள் குறைவாக உள்ளன.
பான்கார்டு என்பது முக்கியமாக வரிவிதிப்பு தொடர்பான ஆவணம், அடையாளம் அல்லது முகவரி நிரூபிக்கும் ஆவணம் அல்ல. பான் கார்டில் பெயர் மட்டுமே இருப்பதால், அது முறையான அடையாள சான்றாக போதுமானதாக கருதப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், இந்திய பாஸ்போர்ட், ரேஷன்கார்டு (புகைப்படம் இருக்கும் குடும்ப தலைவர் மட்டும்), வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களை இணைக்கலாம்.
இனி 18 வயதுக்கு மேற்பட்டோர் பெயர் திருத்தம் செய்ய ஆவணம் வழங்க முடியாமல் கடும் நெருக்கடியை சந்திக்கும் சூழல் நிலவ உள்ளது என்பதால் 'யுதய்' வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.