கழுத்து வலியால் அவதி- 7 அடி உயர கண்டக்டருக்கு பொருத்தமான பணி வழங்க அமைச்சர் உத்தரவு
- 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்.
- கழுத்து வலியால் மிகவும் அவதிப்படுவதாக அமீன் அகமது அன்சாரி பஸ் பயணிகளிடம் புலம்பி உள்ளார்.
தெலுங்கானா மாநிலம் சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு அவரது தந்தை உயிரிழந்ததையடுத்து கருணை அடிப்படையில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டது.
அமீன் அகமது அன்சாரி 7 அடி உயரம் உள்ளார். 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் தினமும் சுமார் 10 மணி நேரம் தலைகுனிந்தபடி வேலை செய்ததால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார். இதனால் அவருக்கு கழுத்து, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதற்கு அவர் சிகிச்சையும் பெற்று வந்தார்.
கழுத்து வலியால் மிகவும் அவதிப்படுவதாக அவர் பஸ் பயணிகளிடம் புலம்பி உள்ளார். மேலும் அவர் தனக்கு வேறு வேலை வழங்குமாறு போக்குவரத்துக் கழகத்திடம் கோரிக்கையும் வைத்துள்ளார்.
10 மணி நேர கண்டக்டர் பணியில் அமீன் அகமது அன்சாரி டிக்கெட் வழங்க குனிந்து போராடுவது தொடர்பாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த புகைப்படம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து போக்குவரத்து அமைச்சர் பொன்னம் பிரபாகர் அமீன் அகமது அன்சாரியை பொருத்தமான பணியில் நியமிக்க உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானா போக்குவரத்து தலையகத்தில் அவரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.